
சூர்யா தயாரித்து முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பசங்க 2 படத்தை பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். சூர்யா நடிப்பது என்று முடிவானதும் கதையில் சில மாற்றங்கள் செய்ததாக கூறப்படுகிறது. இதனை பாண்டிராஜ் மறுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பசங்க 2 நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் குழந்தைகளை பற்றியது. நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள் பயிலும் கல்வி முறையைப் பற்றியும் அதில் எந்த மாதிரியான கல்வி முறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம்.
இந்த மாதிரியான கதையை உடனே மக்களுக்கு சொல்ல முடியாது அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லிய கருத்துகளின் நம்பகத்தன்மை குறையாமல் இருக்க வேண்டும் அதனால் சுமார் இரண்டு வருடம் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது.
"அட்டன்சிவ் டைபர் ஹைபர் டிஆக்டிவ்" என்பது இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாக கதைக்கு தேவைப்பட்டது.
இப்படி பட்ட குழந்தைகள் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கிடையாது இவர்கள் "சூப்பர் கிட்ஸ்" அதி புத்திசாலிகள் என்றும் சொல்லலாம் ஏன் என்றால் சாதாரணமாக மனிதனின் "ஐகியு " 110 என்றால் அந்த குழந்தைகளுக்கு "ஐகியு " 120, 130 இருக்கும். அவர்களை நாம் சாதாரணமாக பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு துறுதுறு வென்று இருப்பார்கள்.
அவர்களைப் பற்றிய படம் என்பதால் ஆய்வில் ஏதாவது இதுபோன்ற படம் வந்திருக்கிறதா என்று பார்த்தோம் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை.
மாதிரிப் படங்கள் இல்லாத காரணத்தால் அதே போல் இருக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களை பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம் அதற்காக இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். அதன் பின்னே படத்தை எடுக்க ஆரம்பித்தோம்.
இதில் சூர்யா குழந்தைகள் மருத்துவராக வந்து குழந்தைகளை பற்றியும், குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார் அதுவும் அறிவுரை சொல்வது போல் இல்லாமல் ரசிக்கும் படியாக இருக்கும்.
இந்த படத்தில் சூர்யாவிற்காக எந்த மாற்றமும் கதையில் இல்லை இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம். சூர்யா, அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் அவ்வளவு தான்.
ஆனால் இதுபோன்ற கதைகளில் சூர்யா போன்ற நாயகர்கள் நடிப்பது மிகப்பெரிய ஒன்று. ஏனென்றால் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கும் அவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்” என்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
Post your comment