பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி

Bookmark and Share

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரம்: நடிகர் பிரகாஷ்ராஜூக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி

பெண்களை இழிவுபடுத்தும் நகைக்கடை விளம்பரத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ஆசிரியர் ஷபியாத். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். அதில், கல்யாண வயதில் உள்ள பெண்களால் தந்தைக்கு ‘டென்ஷன்’ என்று வசனம் பேசியுள்ளார். மேலும், தன் மகளை அறிமுகம் செய்து, ‘தன்னுடைய முதல் டென்ஷன்’ என்று கூறுபவர், திருமண வயதுள்ள மகள்களை வைத்துள்ள பெற்றோர், ‘டென்ஷன்’ என்ற வார்த்தையை ‘டைப்’ செய்து ‘எஸ்.எம்.எஸ்.‘ அனுப்பும்படியும் கூறுகிறார். இதன்மூலம், பெண்களையும், பெண் சமுதாயத்தையும் அவர் தரம் தாழ்த்தியுள்ளார்.

பெண்ணாக பிறப்பது ஒன்றும் பெரும் குற்றம் கிடையாது. பெண்ணாக பிறந்ததற்காக, பெண் சமுதாயத்தை ‘டென்ஷன்’ என்று குறிப்பிட்டு யாரும் அவமரியாதை செய்யவும் முடியாது.

ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்வது தவறில்லை. அதற்காக விளம்பரம் என்ற பெயரில் பெண் சமுதாயத்தை இழிவுப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. மேலும், இந்த விளம்பரம் அனைத்து முன்னணி பத்திரிகைகள், டி.வி. சேனல்கள் ஆகியவற்றில் வெளியாகி வருகின்றன. இதுதவிர, பொதுஇடங்களில் பெரிய அளவில் விளம்பர பலகைகள் வைத்தும் விளம்பரம் செய்யப்படுகிறது.

எனவே, பெண் சமுதாயத்தை இழிவுப்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். விளம்பர பலகைகளை அகற்றவும், பெண்களை இழிவுப்படுத்திய பிரகாஷ்ராஜ் மற்றும் அந்த நகைக்கடை நிர்வாகம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கை தொடர்வதற்கு முன்பு, விளம்பரப்படத்தை தயாரித்து வெளியிட்ட விளம்பர நிறுவனம், நகைக்கடை நிர்வாகம் ஆகியோருக்கு மனுதாரர் நோட்டீசு அனுப்ப வில்லை. அவர்களை எதிர்மனுதாரர்களாகவும் சேர்க்கவில்லை. நடிகர் என்பதால், பிரகாஷ்ராஜை மட்டும் வழக்கில் முதல் எதிர்மனுதாரராக சேர்த்துள்ளார். அதன்பின்னர் மாநகராட்சி ஆணையர், போலீஸ் கமிஷனர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுபோன்ற வழக்கை பொதுநல வழக்காக ஏற்க முடியாது. மனுதாரர் பொதுநல வழக்கு தாக்கல் செய்வதற்கு பதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு முதலில் நோட்டீசு அனுப்பி, அதன்பின்னர் சட்டப்படி பல நிவாரணங்களை கோரி வழக்கு தொடரமுடியும். இந்த காரணங்களுக்காக, இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். 


Post your comment

Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions