
கவுதம்கார்த்திக் நாயகனாகவும் பிரியாஆனந்த் நாயகியாகவும் நடித்த படம் முத்துராமலிங்கம். ராஜதுரை என்பவர் இயக்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்தமாதத்தில் குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
படத்தின் பெயரே பிரபலமாக அமைந்துவிட்டது. அதனோடு இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவோடு இந்தப்படத்தில் பஞ்சுஅருணாசலம் இணைகிறார் என்பதும் படத்துக்குப் பெரிய விளம்பரமாக அமைந்துவிட்டது.
அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்ட படம் முதல்கட்டப் படப்பிடிப்போடு நின்றிருக்கிறதாம். மேற்கொண்டு படத்தைத் தொடருவார்களா? என்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் முதல்கட்டப் படப்பிடிப்பின்போதே படப்பிடிப்புக்குழுவினருக்கு உரிய வசதிகளைத் தயாரிப்புத்தரப்பு செய்து தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
படப்பிடிப்பு முடித்துவிட்டு எல்லோரும் கிளம்புகிற நேரத்தில், குழுவினர் தங்கியிருந்த விடுதிக்கட்டணம் உட்பட கடைசிநேரத்தில் கொடுக்கவேண்டிய தொகையை தயாரிப்புத் தரப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனால் பணம் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று விடுதிக்காரர்கள் சொல்லிவிட படக்குழுவினர் செய்வதறியாது தவித்தனராம்.
விசயமறிந்த நாயகி பிரியாஆனந்த், சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்து படக்குழுவினரை மீட்டாராம்.
மேற்கொண்டு படம் வளருகிறதோ இல்லையோ என்று தெரியாத நிலையிலும் பிரியாஆனந்த் அதிரடியாக உதவியது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
Post your comment