
பல கோடி ரூபாய் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டிக்கொடுப்பது நடிகர்கள் கடமை என்று நடிகை ராதிகா ஆப்தே கூறினார்.
தமிழில் ‘தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன்’ படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் (செப்டம்பர்) மலேசியாவில் நடக்கிறது.
இந்த நிலையில், மும்பையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-
நான் 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். பெரிய நடிகர்கள் படங்கள், சிறு பட்ஜெட் படங்களில் எல்லாம் நடித்துவிட்டேன். நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. நடிகர்- நடிகைகளுக்கு வியாபார மதிப்பீடு முக்கியம். இவர்கள் நடித்தால் படங்கள் நன்றாக ஓடும்என்று பெயர் எடுக்கவேண்டும். அதற்கேற்ப கதை, மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும்.
பல கோடி பணத்தை முதலீடு செய்து படங்களை எடுக்கிறார்கள். வியாபார ரீதியாக அவர்கள் லாபம் அடையவேண்டும். முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறவேண்டும். நஷ்டம் அடைந்தால் ஏமாற்றத்துக்கு ஆளாவார்கள். நஷ்டம் அடையும் படங்களில் நடிப்பதால் நடிகர், நடிகர்களுக்கு எந்த பயனும் இல்லை. தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
பாராட்டுகளையும், விமர்சனங்களையும் சந்தித்து இருக்கிறேன். பாராட்டுகளில் மகிழ்ந்தேன். விமர்சனங்களும் நல்லதுதான். அடுத்தடுத்து எனக்கு நல்ல படவாய்ப்புகள் அமைகின்றன. இதனால் சந்தோஷமாக இருக்கிறேன்.
இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
Post your comment