ரஜினிக்கு கிடைக்கவேண்டியது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்

Bookmark and Share

ரஜினிக்கு கிடைக்கவேண்டியது தனுஷுக்கு கிடைத்துள்ளது - கே பாலச்சந்தர்

ரஜினிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்திருப்பதாகவே நான் கருதுகிறேன், என்றார் இயக்குநர் கே பாலச்சந்தர்.

இந்தியத் திரையுலகின் உயரிய விருதான பால்கே விருது பெறும் இயக்குநர் கே.பாலசந்தர் மற்றும் தேசிய விருது பெறும் திரைக் கலைஞர்கள் ஆகியோருக்கு தினமணி நாளிதழும் டெல்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து தலைநகரில் வியாழக்கிழமை பாராட்டு விழா எடுத்தன.

இந்த நிகழ்ச்சியில் கே.பாலசந்தர் பேசுகையில், "தமிழர்கள் பொதுவாக புத்திசாலிகள்; டெல்லித் தமிழர்கள் அதிபுத்திசாலிகள். அரசு எங்களுக்கு விருதும் பாராட்டும் வழங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகவே எங்களைக் கௌரவித்துப் பாராட்டு விழா நடத்துவதுதான் அதற்குச் சாட்சி.

இங்கு பேசியவர்கள் அனைவரும் என்னைப் பாராட்டியே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் மட்டுமா விருது வாங்கியிருக்கிறேன். பல இளம் கலைஞர்களும் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் இந்த முறை தமிழ்க் கலைஞர்களுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான விருதுகள் கிடைத்திருப்பது, தமிழ் சினிமாவின் வீச்சு அதிகரித்திருப்பதைக் காட்டியுள்ளது.

நல்ல படைப்புகளுக்காக இளம் கலைஞர்கள் விருது பெறும்போது அவர்கள் மீது எனக்கு உண்மையிலேயே பொறாமை ஏற்படுகிறது. இதைச் சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவர்களைப் போல நல்ல படைப்பை நாமும் தரவேண்டுமே என்ற நல்ல எண்ணம்தான் காரணம். இளம் திரைக்கலைஞர்களின் சாதனை என்னை மேலும் மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என்பதுதான் உண்மை.

தனுஷுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அது சாதாரண விஷயமல்ல.

'உனக்கு தேசிய விருது வாங்கும் எண்ணமே இல்லையா' என நான், ரஜினியிடம் அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் 'ஜனங்களின் விருது போதும்' எனக் கூறிவிட்டார். ரஜினிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருது தனுஷுக்குக் கிடைத்ததாகவே நான் கருதுகிறேன்.

இங்கு எல்லோருக்கும் நடைபெற்ற இந்த சிறப்பான பாராட்டு விழாவில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். என்னை விட்டுவிடுங்கள்... இளைய தலைமுறையினரின் திறமையை அங்கீகரித்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் உயர்ந்தால் தமிழ் சினிமா உயரும்," என்றார்.

வைரமுத்து

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, "கே.பி. க்கு கிடைத்த தாதா சாகேப் பால்கே விருது தமிழ்த் திரையுலகுக்குக் கிடைத்த விருது ஆகும். அவர் இந்திப் படத்தை விட்டது, தமிழர்களைப் பட்டினி போடக்கூடாது என்பதற்காகத்தான்," என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் டி ராஜா பங்கேற்று விருது பெற்றவர்களை வாழ்த்திப் பேசினார்.

நடிகர் தனுஷ் (சிறந்த நடிகர்), நடிகை சரண்யா பொன்வண்ணன் (சிறந்த நடிகை), இயக்குநர் வெற்றிமாறன் (சிறந்த இயக்குநர்-ஆடுகளம்), தயாரிப்பாளர் ஷிபு ஐசக் (சிறந்த தயாரிப்பாளர்-தென் மேற்கு பருவக்காற்று), சீனு ராமசாமி (சிறந்த மாநில மொழித் திரைப்படத்துக்கான விருது-தென் மேற்கு பருவக் காற்று), நடிகர் ஜே.தம்பி ராமையா (சிறந்த துணை நடிகர்- மைனா), டி.இ.கிஷோர் (சிறந்த படத் தொகுப்பு-ஆடுகளம்), தினேஷ் குமார் (சிறந்த நடன இயக்கம்- ஆடுகளம்), சீனிவாஸ் எம்.மோகன் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-எந்திரன்), வில்லன் நடிகர் வ.ஐ.செ.ஜெயபாலன் (சிறப்புப் பரிசு-சான்றிதழ்) உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.


Post your comment

Related News
ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ் பட நாயகி
காலா படத்தின் பாடல்கள் மே 9ம் தேதி வெளியிடப்படும் - தனுஷ் அறிவிப்பு
கொடி பார்த்துவிட்டு தனுஷிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கிறாரா?
மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் தொடரி!
பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசி பெற்ற தனுஷ்!
ரஜினியின் பேரனை அழைத்து பேசிய ஜெயலலிதா!
ரஜினிக்கு ஆதரவாக நின்ற தனுஷ்!
ஒரே மாதத்தில் வெளியாகும் ரஜினி, தனுஷ் படங்கள்!
போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியல்: ரஜினியை முந்திய தனுஷ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions