ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்

Bookmark and Share

ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு திரை உலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த விழாவில் திரையுலக பிரமுகர்களுடன் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த் இளையராஜாவுடன் கலந்துரையாடினார்.

ரஜினி பேசும்போது ‘இசை அமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. அன்னக்கிளியில் தொடங்கிய அந்த அபூர்வ சக்தியை இப்போதுவரை பார்க்கிறேன்’ என்றார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம் ’உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார்.

அதற்கு ரஜினி, ’அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளையில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்?

‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவு இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. அவர் என்னையே பாட வைத்தார். நான் 5 வரிகள் தான் பாடினேன். அதற்கே 5 மணி நேரம் ஆனது. இருந்தாலும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டிருக்கார்’’என்று ஆதங்கப்பட்டார்.

இதற்கு பதில் அளித்த இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மைக் மோகன்னே மோகனுக்கு பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார். இளையராஜா ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல’ என்று சொல்ல கைதட்டல் எழுந்தது.

சுஹாசினி ‘ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார், இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார், 2 சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில்...’ என்று சொல்ல தொடங்க அவரை இடைமறித்த இளையராஜா ’ரெண்டு பேர் இல்ல. ஒரே சூப்பர் ஸ்டார் தான். மேடையில் ஏறினா ஏதாவது பேசிடறதா... சூப்பர் ஸ்டார்னா அவர் மட்டும்தான்’ என்று ரஜினியை கைகாட்டினார். ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.

இளையராஜா இசை நிகழ்ச்சி சரியாக 6.45 மணிக்கு தொடங்கி 12.30-க்கு முடிந்தது. 35 பாடல்கள் பாடப்பட்டன. முதல் பாடலாக குரு பிரம்மா பாடல் கோரசில் பாடப்பட்டது. அடுத்து இளையராஜா ஜனனி ஜனனி பாடலுடன் பாட தொடங்கினார். சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும் இளையராஜா முகத்தில் சின்ன சோர்வுகூட தென்படவில்லை.

கடைசியாக முடிக்கும் போது நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுடன் கச்சேரி முடிந்தது. ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே...’ என்ற வரிகளுடன் நிகழ்ச்சியை முடித்தார். 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

பாடலை பாடி முடித்து இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப நன்றி.

இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் தான்.

விஷால் மற்றும் அவரின் அணி வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்கு பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.

சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள், சிலர் பாடலில் இருக்கும் குறையை கண்டுபிடித்து காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைன்னு நடக்கணும் என்று வாழ்த்துறேன்” என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இளையராஜாவுடன் அவரது தொடக்கத்தில் இருந்து பயணித்த பாரதிராஜா, வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, கங்கை அமரன் போன்றோர் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions