ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

Bookmark and Share

ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. முதல் கட்டமாக ரஜினி தனக்கு மிக, மிக நம்பிக்கையுள்ள சிலரைக் கொண்டு ஒரு குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அம்மாவட்டங்கள் பற்றி ரஜினி ஏற்கனவே திரட்டி வைத்துள்ள தகவல்களுக்கு ஏற்ப செயல்படுவார்கள் எனவும், தற்போது தமிழகத்தில் உள்ள சுமார் 60 ஆயிரம் ரஜினி ரசிகர் மன்றங்கள் முறையான நிர்வாகிகள் இல்லாமல் இருப்பதால் அந்த மன்றங்களுக்கு புதிய நிர்வாகிகளை இந்த குழுவினர் நியமனம் செய்வார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது. 

அந்த நிர்வாகிகள் மூலம் ரஜினி மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் கட்டமாக ஒன்றரை கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக சேர்க்க ரஜினி இலக்கு நிர்ணயித்துள்ளார். ரஜினி மன்றத்தின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த 32 மாவட்டங்களையும் 60 பிரிவுகளாக பிரித்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி வேலூர் மாவட்ட நிர்வாகிகள் முதலில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்ட செயலாளராக சோளிங்கர் என்.ரவி நியமனம் செய்யப்படுகிறார். வேலூர் மாவட்ட இணைச் செயலாளராக அருணாச்சலம், மகளிர் அணி செயலாளராக சங்கீதா, இளைஞர் அணி செயலாளராக அருண் ஆகியோர் நியமனம் செய்யப்படுள்ளனர். 

வேலூர் மாவட்ட துணைச் செயலாளர்களாக கணபதி, ராஜன் பாபு, முகமது எஸ். கலிஃபா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் தேர்தல் மூலம் நிர்வாகிகள் நியமனம் செய்யபடுவார்கள், என சுதாகர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions