பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!

Bookmark and Share

பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!

நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர காட்டி வரும் நிலையில் பாஜகவோ ஒரு படி மேலே போய் அவருக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பதன் மூலம் அவர் தங்களை ஆதரிப்பது போன்ற மாயபிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.

அரசியல் வட்டாரத்தில் அனைத்து கட்சித் தலைவர்களுடனும் நட்பு பாராட்டி வருபவர் ரஜினிகாந்த். ஆனால் அந்த கட்சிகளோ ரஜினியுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் அவரது ஆதரவை பெற்றுக் கொள்ளலாம் என்று கணக்குபோட்டு வருகின்றன.

1991-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர் சுதாகரனை தத்து எடுத்து நாடே மிரளும் அளவுக்கு ஆடம்பர திருமணத்தை செய்தார். இது மக்களை முகம் சுளிக்க வைத்தது. கிட்டத்தட்ட அரசு செலவில் நடைபெற்றது போல் இருந்தது இந்த திருமணம்.

1996-ஆம் ஆண்டுநடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என ரஜினி விமர்சித்தார். அப்போது மக்களின் அதிருப்தியை சம்பாதித்த ஜெயலலிதாவின் அதிமுகவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி மேலிடம், அதாவது பி.வி. நரசிம்மராவ் முயற்சித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மூப்பனார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.


எனினும் டெல்லி கேட்காததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார் மூப்பனார். மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் திமுக கூட்டணியில் இடம்பெற்றது. அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்திடம் ஆதரவு கோரலாம் என்று மூப்பனார் திட்டமிட்டார். அதன்படி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரும் ஓகே சொன்னதால் திமுக- தமாக கூட்டணி பெரும் வெற்றியை குவித்தது.

இதற்கு பின்னர் ரஜினி அரசியலுக்கு வர முயற்சிக்கிறார் என்பது போன்ற தோற்றம் உருவானது. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது ரஜினியும் சந்தித்து வந்ததாலும் இந்த ஆரூடங்கள் ரெக்கை கட்டின. 1996-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் ஓரிரு தேர்தல்களில் ரஜினி வாய்ஸ் கொடுத்தாலும் அதை மக்கள் ஏற்கவில்லை.

இருப்பினும் ஒவ்வொரு சட்டசபை தேர்தல்களின் போது திமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ரஜினியின் ஆதரவை கோரித்தான் வருகின்றன. ஆனால் அவற்றில் ரஜினிகாந்த் சிக்காமல் நழுவிக் கொண்டுதான் இருக்கிறார்.

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ரஜினிகாந்தின் பெயரை அப்பதவிக்கு பரிந்துரை செய்ய பாஜக விரும்புகிறது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும், நடிகர் அமிதாப் பச்சன் பனாமா நாட்டில் முதலீட்டாளர்களின் பட்டியலில் சிக்கியதாலும் ஜனாதிபதி பதவிக்கு அவர்களை பரிந்துரைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது.

தற்போது ரஜினியை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதால் எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்காது என்று பாஜக கணக்கு போட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் நுழையவே முடியாத பாஜகவுக்கு ரஜினிகாந்தை ஜனாதிபதியாக பரிந்துரைக்கும் திட்டம் கை கொடுக்கலாம். ரஜினி கன்னடர் என்பதால் கர்நாடகாவில் ஆட்சியையே பிடிக்கலாம் என்பது பாஜகவின் மறைமுக திட்டம்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions