ரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்... அதான் ரஜினி!

Bookmark and Share

ரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்... அதான் ரஜினி!

நக்கீரனில் அந்தக் கட்டுரையைப் படித்த அத்தனைப் பேருக்குமே நெகிழ்ச்சி, வியப்பு... இப்படி ஒரு ரசிகர்... அந்த ரசிகரை ரசித்து மரியாதை செய்த இத்தனை அரிய சூப்பர்ஸ்டார்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று கேட்டுக் கொண்டனர்.

அந்தக் கட்டுரை இதோ...

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண் டாடப்படும் ரஜினியை இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது அவரது வெறித்தனமான ரசிகர் ரஜினி பாலாவுக்கு. ஒரு குழந்தை போல் ரஜினியும் குதூகலித்த அந்த தருணத்தில் நாமும் அங்கிருந்தோம்.

சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த இளைஞர் ரஜினி பாலா. ரஜினி யின் ரசிகர் மட்டுமல்ல, வெறியன் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ரஜினியைப் பார்க்கலாம் வா என யார் கூப்பிட்டாலும் அவர்களுடன் கிளம்பிவிடுவார். வீட்டில் சதா நேரமும் ரஜினி படம் பார்ப்பது, ரஜினியைப் போல் நடை, உடை, பாவனை, பேச்சு, இப்படி ரஜினியே மூச்சென இருக்கும் ரஜினி பாலா வுக்கு வயது 36. ஆனால் செயல்பாடுகள் எல்லாமே ஒரு குழந்தை யைப் போல்தான்.

"நாலு வயசு வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். திடீர்னு மூளைக் காய்ச்சல் தாக்கி இப்படி ஆகிட்டான். ஆனா அவனுக்கு ரஜினி அய்யா மட்டும்தான் தெரியும். ரஜினி அய்யா உடல்நலம் பாதிக்கப் பட்டப்ப, இவன் தற் கொலை பண்ணிக்கப் போய்ட்டான்.

ரஜினி அய்யா மாத்திரை கொடுத்து விட்டார்னு சொன்னாத்தான் மாத்திரை சாப்பிடுவான். ரஜினி அய்யாவை நேரில் ஒரு முறையாவது பார்த்துடணும்கிறதுதான் லட்சியம், கனவு எல்லாமே. ஆனா அது நடக்குமான்னு தெரியல..'' ரஜினிபாலாவின் தாய் பானுமதியின் இந்த ஏக்கத்தை "கிடைக்குமா ரஜினி தரிசனம்? -ஏங்கும் ஓர் உயிர்!' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.

கடந்த செவ்வாய் மாலை நமக்கு ரஜினி வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. உடனே ரஜினி பாலா குடும்பத்தாருக்கு விஷயத்தைச் சொன்னோம். மகிழ்ச்சியில் திக்குமுக்காடியது அந்தக் குடும்பம். புதன் காலை 10 மணிக்கே ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் ஆஜரானோம். ரஜினிபாலா வருவதற்கு சற்று தாமதமாகிவிட்டது.

சரியாக 10.28-க்கு இண்டர்காம் லைனில் வந்து 'அந்தப் பையன் வந்துட் டாரா?' என உதவியாளர் சுப்பையாவிடம் விசாரிக்கிறார் ரஜினி. "இல்ல சார், நக்கீரன்லருந்து வந்துட்டாங்க. அந்தப் பையன் அண்ணா மேம்பாலத் துக்கிட்ட வந்துக்கிட்டிருக்கான்னு தகவல் சார்'' என்கிறார்.

மீண்டும் 10.40-க்கு ரஜினி விசாரிப்பதற்கும் ரஜினிபாலா குடும்பம் வருவதற்கும் சரியாக இருந்தது. "தம்பி உனக்காக சார் காத்துக்கிட்டிருக்காரு'' என்று சொல்லியபடி, ரஜினிபாலாவுக்கும் அவரது தாயாருக்கும் மோர் கொடுத்து உபசரிக்கிறார் சுப்பையா. சில நிமிடங்கள் கரைகிறது... கதவைத் திறந்து கொண்டு மின்னலென அந்த ஹாலுக்குள் பிரவேசிக்கிறார் ரஜினி.

"கண்ணா எப்படி இருக்க?'' என கேட்டபடியே ரஜினிபாலாவை கட்டி அணைக்கிறார் ரஜினி. "தலைவா...'' எனக் கூறியபடி சடாரென ரஜினியின் காலில் விழுகிறார் ரஜினி பாலா. மகிழ்ச்சியில் அதிர்ச்சியாகி நின்ற ரஜினி பாலாவின் தாய் பானுமதிக்கு இந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.

ரஜினி பாலாவை தூக்கி நிறுத்திய ரஜினி, "உட்காரு கண்ணா...''என்றவாறு தன் அருகில் உட்கார வைக்கிறார். "வெளியில நிக்கிறவங்களை உள்ள வரச்சொல்லுங்க'' என ரஜினி சொல்லியதும், ரஜினிபாலாவின் தங்கை மற்றும் உறவினர்கள் உள்ளே அழைத்து வரப்படுகிறார்கள்.

"தம்பிக்கு வயசு என்ன, ஏன் இப்படி ஆயிட்டான்'' என அக்கறையாக ரஜினிபாலாவின் தாயாரிடம் விசாரித்துவிட்டு, "அந்த ஷாலை கொடுங்க''என தன் உதவியாளரிடம் சால்வையை வாங்கி ரஜினிபாலாவுக்குப் போர்த்தி தன்னுடைய வெறித்தனமான ரசிகனை கவுரவிக்கிறார் ரஜினி. சடாரென சேரிலிருந்து எழுந்து ரஜினியின் முன்பு தரையில் உட்கார்ந்து, "அண்ணாமலை' பாம்பு சீன், துள்ளிக் குதித்து எழுந்து "பாட்ஷா' ஸ்டைல், விசுக்கென ஆள்காட்டி விரலை ஆட்டி "ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்' என விதம் விதமாக நடித்துக் காட்டுகிறான் ரஜினிபாலா.

எல்லாவற்றையும் குழந்தை போல் கைதட்டி ரசித்து, வாய் விட்டுச் சிரித்து மகிழ்கிறார் ரஜினி. அடுத்து கிஃப்ட் பாக்ஸ், ஸ்வீட் பாக்ஸ், கையடக்க ரஜினி சிலை ரஜினிபாலாவுக்கு ரஜினி கொடுக்க, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் நெக்குருகுகிறது குடும்பம்.

"அய்யா ஒங்க பேரைச் சொன்னாத்தான்யா மாத்திரை சாப்பிடுறான்'' என ரஜினிபாலாவின் தங்கை கூறியதும், "கண்ணா மாத்திரயை ஒழுங்கா சாப்பிடணும், அம்மாகிட்ட நான் விசாரிப்பேன்... என்ன சரியா?'' என்றதும் "இனிமே ஒழுங்கா சாப்பிடுவேன்''என மழலை மொழியில் சொல்கிறான் ரஜினிபாலா. "பார்த்து பத்திரமா கூப்பிட்டுப் போங்க''என உள்ளத்திலிருந்து வருகிறது ரஜினியின் வார்த்தைகள்.

"அவரை நேரில் பார்த்துட்டான் என் மகன். இனிமே அவன் குணமாயிருவான்கிற நம்பிக்கை வந் திருச்சு," என்றார் ரஜினி பாலாவின் தாய் பானுமதி.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions