
சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. லிங்கா படத்தின் தோல்வி ரஜினியை ரொம்பவே யோசிக்க வைத்தது.
இனி தனது பழைய பாணி படங்களை ரசிகர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம். மக்கள் குறிப்பாக இன்றைய இளம் ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்று முடிவுக்கு வந்தார்.
அவர்களுக்கு ஏற்ற மாதிரி இறங்கி வந்து நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார். அதனால்தான் தற்போது புதுமையான படங்களை வித்தியாசமாக தந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களிடம் மகள் சவுந்தர்யாவை கதை கேட்க வைத்தார். சவுந்தர்யாவுக்கு பிடித்திருந்தால் அடுத்து அந்த கதை ரஜினிக்கு சொல்லப்படும்.
இப்படி பல மாதங்களாக நடந்து வந்தது. அதில் சவுந்தர்யாவும், ரஜினியும் சேர்ந்து டிக் அடித்தது அட்டக்கத்தி ரஞ்சித் கதையை. இதுவும் மெட்ராஸ் படம் போன்று கொஞ்சம் அரசியல் கலந்த காமெடி, சீரியஸ் கலந்த கதை. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் மருத்துவ துறைக்குள் புகுந்து கலாட்டா பண்ணும் தாதாபோல அரசியலுக்கும் புகுந்து தன் பாணியில் கலாட்டா செய்யும் தாதாவின் கதை.
இதில் ரஜினி நடுத்தர வயதை தாண்டிய தாதாவாக நடிக்க இருக்கிறார். இதற்காக அவருக்கு பலவித கெட்அப்கள் போட்டு பார்த்து வருகிறார்கள். அதில் அனைவருக்கு பிடிக்கும் கெட்அப் ஓகே செய்யப்பட இருக்கிறது.
ரஜினியின் ஸ்டார் வேல்யூவிற்கு பங்கம் வந்து விடமாலும், அதே நேரத்தில் புதிய சிந்தனையுடனும் திரைக்கதையை அமைத்திருக்கிறார் ரஞ்சித், இதற்காக 45 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரஜினி.
45 நாள் ரஜினி நடிக்கும் காட்சிகளும், 45 நாள் ரஜினி இல்லாத காட்சிகளுமாக 90 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
படத்தை தயாரிக்க இருக்கிறவர் ரஜினிக்கு முதன் முதலாக 60 அடி உயர கட்அவுட் வைத்து சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்த கலைப்புலி எஸ்.தாணு. ரஜினியின் சம்பளத்தையும் சேர்த்து படத்துக்கு பட்ஜெட் 50 கோடி நியாயமான லாபத்துக்கு படத்தை விற்க வேண்டும்.
அல்லது தயாரிப்பாளரே நேரடியாக திரையிட வேண்டும் என பல நிபந்தனைகளுடன் ரஜினி தாணுவுக்கு படத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வருகிற ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
படத்தை இந்த ஆண்டுக்குள் வெளியிட்டு விட்டு 2016 ஜனவரியிலிருந்து எந்திரன் 2ம் பாகமான நம்பர் ஒண் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி.
Post your comment