தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக நாசூக்காக சீறிய ரஜினி.. அறிக்கையில் கறார்!

Bookmark and Share

தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக நாசூக்காக சீறிய ரஜினி.. அறிக்கையில் கறார்!

அரசியல்வாதிகளுக்கு கறாராக ஒரு பதிலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு எதிராக முதல் முறையாக ரஜினி சீறியதாகவும் இதை பார்க்க முடியும்.

இடம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் இந்த பயணத்தை ரஜினிகாந்த் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இதனை ஏற்று தனது பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்வதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஒரு விஷயத்தை ரஜினி மிகவும் கறாறாக கூறியுள்ளார். இனிமேலும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை என்னிடத்தில் வைத்துவிடாதீர்கள் என்பதுதான் அது.

சக நண்பரும், நடிகருமான கமல்ஹாசனை போலன்றி, இதுவரை அரசியல்வாதிகளுக்கு எதிராக சீற்றமான கருத்துக்களை முன் வைக்காதவர் ரஜினிகாந்த். ஆனால் இந்த அறிக்கையில் நாசூக்காக இனிமேல் என்னிடம் எதையும் வலியுறுத்த வேண்டாம் என குறிப்பிட்டு குட்டு வைத்துள்ளார் ரஜினி.

அறிக்கையில் உள்ள அந்த வரிகள் இவைதான்: இத்தருணத்தில் மதிப்புக்குரிய எனது அருமை நண்பர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஊடகங்களின் மூலமாகவும், மதிப்புக்குரிய வைகோ அவர்கள் தொலைபேசி மூலமாகவும், மதிப்புக்குரிய வேல்முருகன் அவர்கள் நண்பர் மூலமாகவும் பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.

அவர்கள் சொன்ன காரணங்களை முழு மனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்கிறேன். இச் சமயத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு கலைஞன். திருமாவளவன் அவர்களே சொன்னதைப்போல மக்களை மகிழ்விப்பது தான் என்னுடைய கடமை. இனிவரும் காலங்களில் இலங்கை சென்று அங்கே வாழும் தமிழ் மக்களை சந்தித்து அவர்களை மகிழ வைத்து அந்த புனிதப்போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் கிடைத்தால் தயவு செய்து அதை அரசியலாக்கி என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions