சுமூக தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: லிங்கா விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு

Bookmark and Share

சுமூக தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: லிங்கா விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு

ரஜினி நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தை வாங்கி வெளியிட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். பின்னர் தயாரிப்பாளர் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த பிரச்சினையில் தலையிட்டு, விநியோகஸ்தர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை ரஜினி தரப்பில் இருந்து வாங்கிக் கொடுத்தனர்.

ஆனால், இந்த தொகையில் பாதி தொகை மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவும், மீதித் தொகை தங்கள் கைக்கு வந்து சேரவில்லை என்று விநியோகஸ்தர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். இந்த பிரச்சினையை ரஜினி தரப்பில் இருந்து முன்னின்று நடத்திய திருப்பூர் சுப்பிரமணியம் மீதும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தினர். மேலும், வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு ரஜினி கால்ஷீட் தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர் சந்தித்த திருப்பூர் சுப்பிரமணியம், வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் தருவதாக ரஜினி யாரிடமும் கூறவில்லை. அப்படியிருக்கும்போது அவர் ஏன் கால்ஷீட் கொடுக்கவேண்டும் என்று விநியோகஸ்தர்களை நோக்கி எதிர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இதற்கு பதில்கூறும் விதமாக, விநியோகஸ்தர்கள் சிங்காரவேலன் உள்ளிட்ட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளும், எம்ஜி முறையில் பணம் போட்டவர்களும், திரையரங்கு உரிமையாளர்களும், இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் சிங்கார வேலன் பேசும்போது, லிங்கா நஷ்டஈடு பிரச்சினையில் விநியோகஸ்தர்களுக்கு ரூ.12.50 கோடி ரஜினி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், மீதித் தொகைக்கு ரஜினி வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு படம் பண்ணிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததன் அடிப்படையிலேயே இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். 

ஆனால், இப்போது ரஜினி, வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுப்பேன் என்று சொல்லவே இல்லை என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு சுமூக முடிவு எடுக்க முன் வரவேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்காவிட்டால் வலுவான போராட்டத்தை அறிவிப்போம் என்று கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions