வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்: ரோகிணி குற்றச்சாட்டு

Bookmark and Share

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்: ரோகிணி குற்றச்சாட்டு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 15-வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் தொடங்கியது. நேற்று, பிரதிநிதிகள் மாநாடு திண்டுக்கல் நாயுடு மகாலில் நடந்தது.

மாநாட்டையொட்டி மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகளின் ஜோதி மாநாட்டு அரங்கில் ஏற்றப்பட்டது. இந்த மாநாட்டில் நடிகை ரோகிணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் தாண்டி சமூகத்தை பார்க்கும்போது தான், உண்மையான வாழ்க்கையை உணர முடிகிறது. ஒரு வட்டத்தை மீறி, இன்னொரு உலகம் உள்ளது என்பதை சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை, உணர்த்தியது.

உண்மையை விளக்கும் சில ஆவணப்படங்களை வெளியிட அரசு அதிகாரிகள் தடை விதித்தது கவலை அளித்தது. ஆனால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை, தன்னலம் கருதாமல் மீட்ட இளைஞர்கள் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினர்.

சமூகத்தில் ஏற்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராட இதுபோன்ற மாநாடு, கூட்டங்கள் தேவையாக உள்ளது. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டியுள்ளது. போராட்டத்தின் மூலமாகவே கல்வி, உறைவிடம், சலுகைகள், உரிமைகள் பெற வேண்டிய நிலை இருக்கிறது. இதுபோன்ற அரசியல் நிலையை மாற்றக்கூடிய வலிமை நம்மிடம் உள்ளது என்பதை உணர வேண்டும்.

யாரை ஆட்சி பீடத்தில் அமர செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மழை பாதித்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதில் ஏழை-எளிய மக்கள் வசிக்கிற இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பெரிய நிறுவனங்கள் அப்படியே இருக்கின்றன. அவைகளை அரசு அதிகாரிகள் அகற்றவில்லை.

அந்த நிறுவனங்களையும் அகற்றினால் தான் நம்பிக்கை ஏற்படும். பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு போராட வேண்டிய நிலை உள்ளது. இங்கு வந்துள்ள இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகி அரசு அதிகாரத்தில் அமர வேண்டும்.

பாடப்புத்தகம் மட்டும் சரித்திரம் அல்ல. உண்மையான சரித்திரத்தை படித்து அறிந்து கொள்ள வேண்டும். வெள்ளையனே வெளியேறு என்று சொன்னதால் மட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லை. அதற்கு பின்னால் நடந்த எத்தனையோ உயிர்த்தியாகங்களும், போராட்டங்களுமே சுதந்திரத்தை பெற்று தந்தது.

இவ்வாறு நடிகை ரோகிணி பேசினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions