எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்

Bookmark and Share

எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பலதிறமைகளை கொண்டவர் சசிகுமார். இவர் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வந்த, சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். 

அவரது தற்கொலைக்கு கந்துவட்டி கொடுமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக்குமார் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது. அதில் தற்கொலை குறித்து அசோக்குமார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

''என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன் பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரம் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும், ஆனால் அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்புப் படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம், நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களை தூக்கி வருவேன் என்றார். 

யாரிடம் உதவி கேட்பது? அதிகாரவர்க்கம், அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா அமைப்பின் தலைவர் செல்வின்ராஜ் என சகலமும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரை தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே.

எனது உயிரினும் மேலான சசிகுமாரா, என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை சசிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடமிருந்து மீட்பதற்கு திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு, நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும்.

என் சாவை வைராக்கியமாக எடுத்துக் கொள்.  என்னைப் போல் நீ கோழை ஆகிவிடாதே. எத்தனையோ பேரை வாழவைத்த நீ கண்டிப்பாக நல்லபடியாக வாழ வேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி. என்னை நினைத்துப் பார்க்காதே. 

நீ நிறைய உழைத்திருக்கிறாய், நீ சுயம்பு, என்னைக் காப்பாற்றாத கடவுள் உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்புச் செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.

எனக்கு வாழத் தகுதியில்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை. அதனால் எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக் கொள்கிறேன்.  அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள்.

இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருடம் யாருக்கும் பயன் இல்லாத, ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை. 

எதிலும் ஜெயிக்காத நான் எனது தற்கொலையில் தோற்கமாட்டேன் என்று நம்புகிறேன்'' இவ்வாறு அசோக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திரையுலகினர் பலரும் அசோக் குமாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  அன்புச் செழியனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

தலைமறைவாகியிருக்கும் அன்புச்செழியனை போலீசார் தேடி வருகின்றனர். 


Post your comment

Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions