தமிழர்கள் தலைமையேற்க தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும்- சீமான் அறிக்கை

Bookmark and Share

தமிழர்கள் தலைமையேற்க தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும்- சீமான் அறிக்கை

வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும்  நாம் தமிழர் கட்சி சார்பில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த நடிகர் சங்கத்தில் நாடகங்களில், திரைப்படங்களில் புகழ் பெற்றிருக்கிற நடிகர்கள் உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள் இருக்கிறார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா உள்ளீட்ட பல ஆளுமைகளை கொண்டிருந்த பெருமைகள் பலவைந்த மாபெரும் அமைப்பாக நடிகர் சங்கம் விளங்குகிறது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னிந்திய நடிகர் சங்கமாக உருவாக்கப்பட்ட இச்சங்கம் பின்னர் பிரிந்து கேரள நடிகர்களுக்கென அம்மா (AMMA) என்றும்,ஆந்திர நடிகர்களுக்கென அப்சிசி (APFCC) என்றும், கன்னட நடிகர்களுக்கென கேப்பா (KFAA) என்றும் அவரவர் மொழி சார்ந்த ,பகுதி சார்ந்த  தனித்தனி சங்கங்கள் ஏற்பட்டு விட்ட பின்னரும் கூட,

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பெரும்பாலும் தமிழ் நாடகங்களில், தமிழ்த்திரைப்படங்களில்களில் நடிக்கிற நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்ற சூழலில் இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இச்சங்கம் செயல்படுவது ஏற்புடையது அல்ல.

தமிழினத்தின் பெருமை மிகு கலை அடையாளமான அய்யா நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கூட மலையாள படத்தில் நடிக்கும் முன் அங்கிருக்கும் நடிகர் சங்கமான ‘அம்மா’வில் உறுப்பினரான பின் தான் நடித்தார்.

எனவே இச்சங்கம் இன்றளவும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்றிருப்பது சரியானதல்ல. தமிழ்த் திரையுலகத்திற்கு முற்றிலும் சொந்தமான இச்சங்கம் “தமிழ்நாடு நடிகர் சங்கம் “ என பெயர் மாற்றம் அடைவது தான்  மிகச் சரியானதாக இருக்கும்.   

மேலும் வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ள இச்சங்க தேர்தல் தொடர்பான எனது கருத்தை ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகள் பேசித் தீர்த்திருக்க வேண்டியவை ஆனால் காலம் கடந்து விட்டது. தேர்தலில் பங்கேற்கிற இரண்டு அணிகளிலும் எனது நண்பர்கள், என் மதிப்பிற்குரியவர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய அங்கமாக திகழ்கிற இச்சங்கத்தின் தலைமையில்,முக்கியப் பொறுப்புகளில் தகுதியும், திறமையும், நேர்மையும் மிக்க தமிழர்கள் இடம் பெற வேண்டும் என்கிற எனது விருப்பத்தினை இச்சமயத்தில் நான் தெரிவிக்கிறேன்.

யார் வேண்டுமானாலும் தமிழர்களுக்கு தலைமை தாங்கலாம் என்கிற நிலை இவ்வினத்தின் தன்மானத்திற்கு இழுக்கு. உலகிலேயே தன்மானத்திற்கு இயக்கம் தொடங்கிய தமிழினம் இன்று தனக்கு தலைமையேற்க யார் யாரையோ எதிர்பார்த்து நிற்பது அவமானம். ஒரு இனத்தின் தன்மதிப்பு என்பது அவர்களே அவர்களது இனத்திற்கு, நிலத்திற்கு தலைமை ஏற்பதாகும் இல்லையேல் அது அடிமைத்தனதிற்குத்தான் அடித்தளமிடும்.

இது இனவாதமோ பாசிசமோ அல்ல. பிற மாநிலங்களில் செயல்படுகிற திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் தமிழர்கள் யாராவது அச்சங்கத்தில் தலைமையையோ முக்கிய பொறுப்புகளையோ ஏற்க முடியுமா?,அதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்பதை இச்சமயத்தில் ஓட்டளிக்கப் போகும் திரைப்பட நாடக கலைஞர்கள் இன உணர்வோடும் மான உணர்வோடும் சிந்தித்து பார்க்க வேண்டும். 

‘தகப்பன் என்பவன் பெத்தவனாக இருக்க வேண்டும், தலைவன் என்பவன் ரத்தவனாக இருக்கவேண்டும்’ என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் யாரும் வரலாம், வாழலாம், நடிக்கலாம் ஆனால் வழிநடத்தும் தலைமை தமிழர்களாக இருத்தல் வேண்டும்.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தகாரர்களான நாம் வந்தவரை எல்லாம் வாழவைப்போம் அது எமது இனத்தின் பெருமை, சொந்தவரை மட்டுமே தலைமை ஏற்க வைப்போம் அது நமது இனத்தின் அடிப்படை உரிமை. இக்கருத்து நாட்டிற்கு மட்டுமல்ல நடிகர் சங்கத்திற்கும் பொருந்தும் என்பதை புரிந்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

நடிகர் சங்கத்தின் முக்கிய தலைமைப் பொறுப்புகளை தமிழர்களே வகிக்க வேண்டும் என்கிற உணர்வு சார்ந்த எமது கோரிக்கையை எமது கலையுலக சொந்தங்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்கக் அன்போடு வேண்டுகிறேன். 


Post your comment

Related News
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி... எடப்பாடி அரசை விளாசிய சீமான்!
விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?
ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions