பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி... எடப்பாடி அரசை விளாசிய சீமான்!

Bookmark and Share

பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி... எடப்பாடி அரசை விளாசிய சீமான்!

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவத்துள்ளார். 

பதவி வெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி என்றும் அவர் சாடியுள்ளார். வறட்சியால் தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. தமிழகத்தில் 400க்கும மேற்பட்ட விவாயிகள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தமிழக அரசின் இந்த பிரமாணப்பத்திரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசை நான் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

பழந்தமிழர்கள் பயன்படுத்தி வந்த நீர்மேலாண்மை எனும் நீரியல் நிபுணத்துவத்தை கையாளாததாலும், நீரூற்றுகளாக விளங்கிய நீர்நிலைகளை நிர்மூலமாக்கியதாலும், மழைதரும் மரங்களை அழித்தொழித்ததாலும் கடந்த 143 ஆண்டுகாலத்தில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வறட்சியில் தமிழகம் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. இக்கொடிய வறட்சியினாலும், காவிரி நதிநீர் மறுக்கப்பட்டதனாலும் முப்போகம் விளைந்த காவிரிப்பாசனப் பகுதிகள் இன்றைக்கு ஒருபோகம்கூட விளைவிக்க முடியாத இழிநிலைக்குத் உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு மட்டும் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகம் முழுக்க இறந்துபோயிருக்கிறார்கள்.

இறந்துபோன அவ்விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு கேட்டும், விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும் விவசாயப்பெருங்குடியினரோடு, பொதுமக்களும் போராடிக்கொண்டிருக்கிற வேளையில், ஒட்டுமொத்த வேளாண்பெருங்குடி மக்களின் தலையிலும் பேரிடியை இறக்கியிருக்கிறது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப்பத்திரம். அதில், ‘விவசாயிகள் யாரும் வறட்சியினால் இறக்கவில்லை; குடும்பப் பிரச்சினை, உடல்நலக்கோளாறு, முதுமையின் காரணமாகத்தான் இறந்திருக்கிறார்கள்' எனக் குறிப்பிட்டு, ஒட்டுமொத்த விவசாயிகளின் மரணத்தையும் அப்பட்டமாக மூடி மறைத்திருக்கிறது. இது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்றுவதையே முழுமுதற் குறிக்கோளாய் கொண்டு, பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி என்பதையே இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது. எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிர்கதியற்று நிற்கும் வேளாண்பெருங்குடி மக்களின் உணர்வுக்குத் துளியும் மதிப்பளிக்காது அவர்களை மூன்றாம்தர குடிமக்களை போன்று இந்த அரசுகள் நடத்துகிறது என்பதற்கு இதுவே சாட்சி.

கடும்வறட்சியினாலும், கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும் நீரற்று வறண்டுபோன நிலத்தில் கருகிய பயிர்களைப் பார்த்து கண்ணீர் வடித்து அதே நிலத்திலேயே சுருண்டு விழுந்து மாரடைப்பாலும், மனம் உடைந்து தனது நிலத்திலேயே தூக்குப்போட்டுக் கொண்டதாலும் இறந்துபோன வேளாண்பெருங்குடி மக்களின் மரணத்தை முற்றாக மறைத்து, பொத்தாம்பொதுவாக வறட்சியினால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை எனக்கூறியிருப்பது ஒட்டுமொத்த உழவர் பெருமக்களின் நெஞ்சிலும் ஆறா காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுமையற்ற ஆட்சிமுறையினாலும், அக்கறையற்ற நிர்வாகத்திறனாலும் விவசாயப்பெருங்குடி கடனாளியாக்கி, சாகடித்ததைவிட அவர்களின் மரணத்தை மூடிமறைத்ததுதான் விவசாயிகளுக்கு அரசு செய்திருக்கிற பச்சைத்துரோகமாகும். இது இறந்துபோன விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்துவதாகும். இதனை மனசாட்சியுள்ள எவராலும் ஏற்க முடியாது.

கடன்வாங்கி செய்த விவசாயம் பொய்த்துப்போனதால் கடனைக் கட்ட வழியற்று நிற்கிற விவசாயி, தன் மானத்தை இழந்துவிடக்கூடாது என்பதால் உயிரையே இழக்கத் துணிகிறான். மானத்திற்காக மரணத்தையே சந்திக்கத் தயாராகும் அத்தகைய விவசாயப் பெருங்குடி மக்களின் மரணத்தை எள்ளி நகையாடுவதும், இழிவுபடுத்துவதுமான செயல்களை ஆட்சியாளர்கள் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள். ‘விவசாயிகள் ஏழைகள் இல்லை; அவர்கள் வட்டிக்குப் பணம்விட்டு சம்பாதிக்கிறார்கள்' எனவும், ‘விவசாயிகள் ஒருவரும் சாகவில்லை; இறந்தால் தமக்குதான் தெரிந்திருக்குமே' எனவும் திருவாய் மலர்ந்தருளிய திருவாளர்களெல்லாம் அமைச்சரவையை இன்றைக்கும் அலங்கரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், விவசாயிகள் காதல்தோல்வியாலும், ஆண்மைக்குறைவாலும், குடும்பப் பிரச்சினைகளினாலும் மரணமடைவதாக இரு ஆண்டுகளுக்கு முன்பு நச்சுக்கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார். அதனை அப்படியே அடியொற்றுவது போல அமைந்திருக்கிறது தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிற பிரமாணப்பத்திரம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறைசென்றபோதும், மரணமடைந்தபோதும் அவருக்காக இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் குடும்பத்திற்குத் தேடிப்போய் நிவாரணம் அளித்த அதிமுக அரசு, உலகுக்கு உணவிடும் உன்னதத் தொழிலைச் செய்யும் உழவர் பெருமக்களின் விவசாய மரணத்திற்கு நிவாரணம் தர மறுப்பது சகித்துக்கொள்ளவே முடியாத பெரும் அநீதியாகும். இது வேளாண் பெருங்குடி மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வுகளையுமே சீண்டுவதாகவும், காயப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை எனத் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாணப்பத்திரத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, இறந்துபோன விவசாயிகளைப் பற்றிய உண்மைநிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும், இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Post your comment

Related News
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?
ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்
முதல்வர் ஓபிஎஸ்-க்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு- சசிக்கு எதிர்ப்பு: சீமான்
தைப் புரட்சியை அடியொற்றிய கம்பளா புரட்சி.. கன்னடர்களோடு நாம் தமிழர் கை கோர்க்கும்: சீமான்
மாணவர்களுக்கு சோறு, தண்ணீ கொடுத்தது தப்பா.. திட்டமிட்டு கொளுத்திய போலீசார்.. கொதித்த சீமான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions