தைப் புரட்சியை அடியொற்றிய கம்பளா புரட்சி.. கன்னடர்களோடு நாம் தமிழர் கை கோர்க்கும்: சீமான்

Bookmark and Share

தைப் புரட்சியை அடியொற்றிய கம்பளா புரட்சி.. கன்னடர்களோடு நாம் தமிழர் கை கோர்க்கும்: சீமான்

கர்நாடகத்தின் பாரம்பரிய கம்பளா விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் போராட்டம் வெல்லட்டும். இப்போராட்டத்தில் கர்நாடக நாம் தமிழர் கட்சியும் தன்னை இணைத்துக் கொள்ளும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு புரட்சியின் விளைவை இந்தியா கண்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேசிய இனமும் தனது அடையாளத்தை, கலாச்சாரத்தைக் கட்டிக் காக்க வீறு கொண்டெழ ஆரம்பித்துள்ளது. இந்த வரிசையில் கர்நாடகத்தில் தற்போது கம்பளா என்ற பாரம்பரிய விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. இப்போராட்டத்திற்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்வேறு மொழி வழித் தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து வாழும் ஓர் ஒன்றியமாக இந்தியா விளங்குகின்றது. இதில் வாழும் ஒவ்வொரு தேசிய இனமும் தனித்த பண்பாட்டு அடையாளங்களையும், தனக்கே உரிய பாரம்பரிய மரபுகளையும் நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகின்றது.

இவையாவற்றையும் சிதைத்து அழித்து, தேசிய இனங்களின் உரிமைகளை அடியோடு மறுத்து இந்தியாவை இந்து நாடாக கட்டமைக்க முயல்கிறது இந்துத்துவத் தலைமைப் பீடம். அதற்கான முன்முயற்சியாக தேசிய இனங்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, அடையாளம், வரலாறு, விளையாட்டு, மரபு என எல்லாவற்றையும் சிதைக்கின்ற வேலையினைத் தொடங்கியிருக்கிறது. அதற்கான முன்னோட்டம்தான் புதிய கல்விக்கொள்கை தொடங்கி இந்தித் திணிப்புவரையுமான இந்துத்துவத்தின் வேர்பரப்பும் அத்தனைச் செயல்பாடுகளும்.

தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையும், கன்னடர்களின் கம்பளாவுக்கு விதிக்கப்பட்டத் தடையும் அதன் நீட்சியேயாகும். தேசிய இனங்களுக்கு எதிரான ஆரியத்தின் இத்தகையச் செயல்பாடுகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி, தங்களது தனித்த அடையாளங்களைத் தற்காத்துகொள்ள, தேசிய இனங்கள் தங்களது அடையாளத்தோடு ஓரணியில் சங்கமிக்க வேண்டியது வரலாற்றுப் பெருங்கடமையாகும்.

தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டின் மீது தொடுக்கப்படும் போருக்கு எதிராக எம்மின இளையப் புரட்சியாளர்கள் கிளர்ந்தெழுந்து உலகமே வியக்கும்வண்ணம் மாபெரும் அறவழிப்போராட்டத்தை நிகழ்த்தி வரலாற்றில் தைப் புரட்சியாக பதிவு செய்திருக்கிறார்கள். இதன்மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் பரவிவாழும் தமிழர்களிடையே ஓர்மையும், இனவெழுச்சியும் ஏற்பட்டு, தமிழ்த்தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் விழிப்புற்றிருக்கிறது... இளையோர் கூட்டத்தின் வரலாற்று பெரும் எழுச்சி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதலை மீட்டிருப்பதோடு, தமிழர்களின் அத்தனைப் பண்பாட்டு விழுமியங்கள் குறித்தும், பாரம்பரிய அடையாளங்கள் குறித்தும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி, அதற்கே திரும்ப வழிவகை செய்திருக்கிறது.

தமிழ் இளையோர் எம்மண்ணில் நிகழ்த்திய தைப் புரட்சியை அடியொற்றி கன்னட இளைஞர்களும், பொதுமக்களும் கன்னடர்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா எனப்படும் எருது ஓட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகப் போராடுவது மிகுந்த மனமகிழ்ச்சியையும், பெருத்த நம்பிக்கையையும் தருகின்றது. அவர்களது போராட்டம் சிறக்கவும், போராட்ட நோக்கம் வெல்வதற்கும் தமிழ்த்தேசிய இனத்தின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தோடு கம்பலா விளையாட்டை மீட்கும் கன்னடர்களின் எழுச்சிமிகுப் போராட்டங்களில் கர்நாடக நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் எனவும் உறுதியளிக்கிறேன். சனநாயகப் புரட்சி வெடிக்கட்டும்! அநீதிக்கு எதிரான போர் வெல்லட்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Post your comment

Related News
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
சீமான் குஷ்பு இணையும் 'டிராபிக் ராமசாமி ' படம்!
கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி
நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பதவிவெறி பிடித்து அலையும் மக்கள் நலனற்ற காட்டாட்சி... எடப்பாடி அரசை விளாசிய சீமான்!
விஜய்க்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரை வைத்து பகலவன் படத்தை இயக்குகிறாரா சீமான்?
ஆட்சியை கலைத்து விட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் - சீமான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions