ராஜஸ்ரீயின் திருடுபோன நகையை மீட்டது போல...தான் நகைகளை மீட்டுத்தர நடிகை ஷீலா கோரிக்கை!

Bookmark and Share

ராஜஸ்ரீயின் திருடுபோன நகையை மீட்டது போல...தான் நகைகளை மீட்டுத்தர நடிகை ஷீலா கோரிக்கை!

பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீயின் கவனத்தை திசை திருப்பி, கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.15 லட்சம் தங்கம் - வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கொள்ளையன் சர்புதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.15 லட்சம் தங்க-வைர நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன.

இந்த நிலையில், ராஜஸ்ரீயைப்போல இன்னொரு பழம்பெரும் நடிகை ஷீலாவும் ரூ.37 லட்சம் மதிப்புள்ள தங்க-வைர நகைகளை பறிகொடுத்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஷீலாவின் படுக்கை அறையில் வைத்திருந்த அந்த நகைகள் திருட்டு போய்விட்டதாக, கொடுத்த புகாரின் பேரில் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை, நகைகள் கிடைக்கவில்லை என்று நடிகை ஷீலா வருத்தத்துடன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் வசிக்கும் அவர் கூறியதாவது:-

நான் தமிழ், மலையாளத்தில் சுமார் 450 படங்களில் நடித்துள்ளேன். சந்திரமுகி உள்பட 15 தமிழ் படங்களில் நடித்திருக்கிறேன். மலையாளப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளேன். நான் கதாநாயகியாக நடித்த செம்மீன் மலையாளப்படம் தேசிய விருது பெற்றது. நடிகர் பிரேம் நசீருடன் 107 படங்களில் நடித்ததற்காக எனக்கு கின்னஸ் சாதனை விருது கிடைத்தது. எம்.ஜி.ஆருடன் பாசம், பணத்தோட்டம் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனக்கு மிகவும் பிடித்தமான தோழி.

நடிகை ராஜஸ்ரீயிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்த நபரை போலீசார் கைது செய்து, நகைகளை மீட்டுள்ளதாக, செய்தி படித்தேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. போலீசார் நினைத்தால் முடியாதது இல்லை.

எனது வீட்டிலும் திருட்டு போன நகைகளை போலீசார் மீட்டுத்தரவேண்டும். நகைகளை திருடிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவேண்டும். ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது, நான் அவரை சந்தித்து எனது வீட்டில் திருட்டு நடந்தது பற்றி புகார் கொடுத்தேன். உடனே அவர் வழக்கு போடச்சொல்லி உத்தரவிட்டார்.

வழக்குப்பதிவு செய்து, தினமும் போலீசார் என் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் என் வீட்டில் நகைகள் திருட்டு போனது பற்றி பத்திரிக்கைகளில் செய்தி எதுவும் வரவில்லை. நான் சினிமாவில் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த பணத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நகைகள். 

ஆசையாக பொக்கிஷம் போல வைத்திருந்தேன். அத்தனை நகைகளையும் அள்ளிச்சென்றுவிட்டனர். தினமும் அதைப்பற்றி நினைக்கும்போது எனக்கு அழுகை வருகிறது. தற்போதைய போலீஸ் கமிஷனரிடமும் நான் பேசவுள்ளேன். நகைகளை மீட்டுத்தந்தால், ராஜஸ்ரீயைப் போல நானும் சந்தோஷப்படுவேன். 

இவ்வாறு நடிகை ஷீலா தெரிவித்தார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions