பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி

Bookmark and Share

பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி

நடிகர் சிம்பு பாடி, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படும் ஆபாச பீப் பாடல் இணையதளத்தில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் கடந்த டிசம்பர் மாதம் 12–ந் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது புகார் செய்தனர்.

புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் 2 பேர் மீதும் பெண்களை இழிவுப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதேபோல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் சிம்பு, அனிருத் மீது பெண்கள் அமைப்பினர் புகார் செய்தனர். இந்த புகார்களின் பேரில் அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி ரேஸ்கோர்ஸ் போலீசார் நடிகர் சிம்புவுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் 2 முறை சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து இசையமைப்பாளர் அனிருத் கடந்த மாதம் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். நடிகர் சிம்பு போலீஸ் நிலையத்தில் ஆஜராக காலஅவகாசம் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி நடிகர் சிம்பு நாளை மறுநாள் (24–ந் தேதிக்குள்) கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தனது வக்கீலுடன் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு வழக்கு விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் செல்வராஜை சந்தித்து தனது மகன் சிம்புவின் மீதான வழக்கு குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு இன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து ஓட்டலுக்கு சென்ற சிம்பு சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு காலை 10 மணியளவில் காட்டூர் போலீஸ் நிலையத்தில் நடிகர் சிம்பு தந்தை டி.ராஜேந்தருடன் நேரில் ஆஜரானார்.

அவரிடம் விசாரணை அதிகாரிகள் உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பீப் பாடல் குறித்து விளக்கம் கேட்டறிந்தனர். ஆபாச பாடலை எழுதியது யார்? 

இந்த பாடலுக்கு இசையமைத்தவர் யார்? நீங்கள் தான் பாடலை பாடினீர்களா? பாடல் இயற்றப்பட்ட இடம் எங்கு உள்ளது? பாடலை இசையமைத்தபோது உடனிருந்த கலைஞர்கள் யார்? இணையதளத்தில் பாடலை வெளியிட்டது யார்? என்பன உள்ளிட்ட 35 கேள்விகளை நடிகர் சிம்புவிடம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சரமாரியாக கேட்டறிந்தார். அதற்கான விளக்கத்தை நடிகர் சிம்பு அளித்ததாக தெரிகிறது.

நடிகர் சிம்பு காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானதையொட்டி சிம்புவை காண ரசிகர்களும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக கோவை காந்திபுரத்தில் உள்ள காட்டூர் போலீஸ் நிலையத்தில் இன்று நடிகர் சிம்பு நேரில் ஆஜரானார். அவரிடம் போலீஸ் உதவி கமிஷனர் ரமேஷ் கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகர் சிம்பு நிருபர்களிடம் கூறியதாவது:–

பீப் பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தேன். இனிமேல் இறைவன் பார்த்துக் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சிம்புவை காண திரண்டிருந்த ரசிகர்கள் அவரை பார்த்ததும் தலைவா...தலைவா...என கோஷம் எழுப்பி அவரை நெருங்க முயன்றனர்.

இதனால் போலீஸ் நிலையம் முன்பு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் ரசிகர்களை கட்டுப்படுத்தி நடிகர் சிம்புவை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions