
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பாக்ஸ் ஆபீசில் எல்லா சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இந்நிலையில், கவுதம் மேனன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்க தொடங்கியுள்ளார்.
இவர், ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடங்குவதற்கு முன்பாக சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஜித் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார்.
இப்போது, ‘என்னை அறிந்தால்’ வெளியானதைத் தொடர்ந்து சிம்பு படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற பிப்ரவரி 21-ந் தேதி தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. புனே மற்றும் மங்களூரில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பில் சிம்புவை மிகவும் அழகான தோற்றத்தில் காட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கெட்டப்புக்கு சிம்பு தயாராகி வருகிறார்.
அழகான காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ஏற்கெனவே பாடல்களை பதிவு செய்துவிட்டார். இப்படத்திற்கு முதலில் ‘சற்றென்று மாறுது வானிலை’ என்று பெயர் வைத்திருந்தார்.
தற்போது, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘உறுதி கொண்ட நெஞ்சினாய்’ என்ற இரு தலைப்பை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், இதில் ஒன்றை உறுதி செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் என்பவர் நடிக்கிறார். நடன இயக்குனர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Post your comment