பாசமலர் அஜித் பற்றியும் வேதாளம் பற்றியும் சிவா சொன்ன சுவாரஷ்யங்கள்

Bookmark and Share

பாசமலர் அஜித் பற்றியும் வேதாளம் பற்றியும் சிவா சொன்ன சுவாரஷ்யங்கள்

சமீபத்தில் இயக்குனர் சிவா பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியத்துள்ளார். அப்போது வேதாளம் படம் பற்றி பல சுவாரஷ்ய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அஜித்துடன் இரண்டு படங்கள் வேலை பார்த்த அனுபவம் பற்றி? என்று கேட்டதற்கு,

‘‘எல்லாரும் வீரம் வெற்றியடைந்த பிறகு தான் அஜித் எனக்கு ‘வேதாளம்’ கொடுத்தார்'னு சொல்றாங்க. அப்படி இல்லை. ‘வீரம்’ படம் ஆரம்பிச்ச நாலாவது நாள்... ‘நாம அடுத்த படமும் பண்றோம்... ஓகேவா?’னு கேட்டார்.

எனக்கு ஆச்சரியம் தாங்கலை. அவருக்கு என் கேரக்டர், சின்சியாரிட்டி, மேக்கிங் எல்லாம் பிடிச்சிருக்கு. என்னை நம்பி எனக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாத்தி இருக்கேன்'னு நிச்சயமா நம்புறேன்.

அஜித் சார் தொழிலுக்கும் டீமுக்கும் அவ்வளவு உண்மையா இருப்பார். அதே அளவு உண்மை நம்மகிட்டேயும் இருந்ததுன்னா எந்தப் பிரச்னையும் இல்லை. அவருக்கும் எனக்கும் ஒரு இடத்தில் கூட, ஒரு நாள் கூட, ஒரு நிமிஷம் கூட எந்தவித மனஸ்தாபமும் ஏற்பட்டதே இல்லை. அவர் ஒவ்வொரு நாளும் இம்ப்ரஸ் பண்ணிக்கிட்டே இருப்பார். இப்படிக் கூட ஒருத்தர் இருப்பாரான்னு ஆச்சரியம் வரும்.

அவர்கிட்ட இருந்து எதைக் கத்துக்கிட்டாலும், ‘சார், உங்ககிட்ட இருந்து இதைக் காப்பியடிச்சிட்டேன்’னு சொல்லிடுவேன். அவர் லேசா சிரிச்சுப்பார். முன்னாடி போனில் பேசிட்டு இருந்தோம். திடீர்'னு ஒரு நாள் ‘‘ஃபேன்டம்’னா தமிழில் என்ன?’னு கேட்டார். அதில் இருந்து வந்தது தான் ‘வேதாளம்’ டைட்டில்’.
‘வேதாளம்’ இரக்கம் இல்லாதவரா? அடிதடியில் இறங்குவாரோ..? என்று கேட்டதற்கு,

தர லோக்கல் கேரக்டர். இதுவரை 56 படத்தில் ‘தல’ நடிச்சிட்டாரு. இதுவரைக்கும் இந்த அளவு இறங்கி அடிச்சதில்லை. சமூகத்தில் இருக்கிற எல்லா கேரக்டரையும் அவர் பண்ணிட்டாரு. நார்த் மெட்ராஸ் பேச்சு, பாடி லாங்குவேஜ் அப்படியே பக்கா. எல்லாமே புதுசா இருக்கு. படம் பார்த்து முடிஞ்ச பிறகு ரெண்டு விஷயம் தெரிந்தது. 

ஒண்ணு, அஜித் நடிப்பு ஹைலைட். இன்னொண்ணு, பெண்களுக்கு படம் ரொம்பப்பிடிக்கும். என்ன சம்பாதிச்சாலும், சமூகத்தில் என்ன அந்தஸ்து கிடைச்சாலும், நாம் கஷ்டப்படுறது நம்ம ஃபேமிலிக்குத்தானே.... அஜித்துக்கு பெண்கள் என்றால் பெரிய மரியாதை.

அம்மான்னா அவருக்கு உயிர். அவர் இயல்பாகவே ஃபேமிலி ஆளு. அந்த ஒரிஜினல் கேரக்டரோட என்ரிச், இந்தப் படத்தில ஒர்க் அவுட் ஆகிடுச்சு. அதனால உண்மையா இருக்கு. பெண்கள் மனதைக் கவர்கிற படமாவும் இது இருக்கும்.

அஜித் - ஸ்ருதி ஹாசன் ஜோடி எப்படியிருக்கு? என்று கேள்விக்கு,

இதில் அவங்க ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் ஆங்கிள் பெரிசா இல்லை. ஆனால், ஜாலி இருக்கும். ஸ்ருதி, சூரி காமெடியெல்லாம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும். டயலாக் எழுதுவது பெரிய விஷயமே இல்லை. நாம நினைச்சு எழுதினது படத்துல அப்படியே வரணும். அப்பதான் நிம்மதி. அந்த நிம்மதி எனக்கு ஒவ்வொரு சீன் முடிஞ்ச பின்னாடியும் வந்தது.

அஜித் உங்களுக்கு எப்பவும் ஸ்பெஷல்...

முதல் தடவை ‘வீரம்’ படத்துக்காகத் தான் அவரை சந்திச்சேன். எத்தனை நாள் என் கால்ஷீட் வேணும்’னு கேட்டார். ‘90 நாள் போதும்’னேன். ‘90 நாள் மட்டுமில்லை, என் 20 வருஷ உழைப்பு, அனுபவத்தைத் தர்றேன். நல்லா எடுத்துக் கொடு’னு சொன்னார். மறக்க முடியாத வார்த்தை அது. அவர் என்கிட்ட ‘அப்படி சீன் பண்ணு, இப்படி சீன் பண்ணு, இப்படி டயலாக் வை’னு சொன்னதேயில்லை. ஓவரா பன்ச் டயலாக் வேண்டாம், தன்னைத் தானே புகழ்'ற மாதிரி வரக்கூடாதுன்னு தான் சொல்லியிருக்கார்.
லட்சுமி மேனன் தங்கச்சியா எப்படி?

வேதாளம் படத்தை ஆக்‌ஷன் ‘பாசமலர்’னு சொன்னா சரியா இருக்கும். இன்னிக்கு வரைக்கும் எல்லாருக்கும் அக்கா, தங்கச்சியெல்லாம் அபூர்வமான உறவுகள் தான். இந்த ஸ்கிரிப்ட் எழுதும்போது எனக்கு லட்சுமி தவிர வேறு யாரும் புத்தியில் இல்லை. அப்படியும் நிறையப் பேரைப் பார்த்தோம். திருப்தியே இல்லை. லட்சுமியை தொடர்பு கொண்டால் பரீட்சை'னு போன் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

ஒரு டி.வியில் லட்சுமி மேனனே ‘அஜித்தோட நடிக்க ரொம்ப ஆசை’னு பேட்டி கொடுத்தாங்க. அடுத்த அரை மணி நேரத்தில் அவங்களை போனில் பிடிச்சேன். ரொம்ப ஆசையாக ‘ஓகே... ஓகே...’ன்னு சொல்லிட்டாங்க. குட்டி குட்டி எமோஷனில் பின்னியெடுத்து, சும்மா அருமையான நடிப்பு. சீனை உள்வாங்கி நடிக்கிறது அவங்களோட இயல்பு.

உங்க படங்களில் ஆக்‌ஷன் இருக்கும், இந்த படத்தில் எப்படி...

இதில் அஜித் கொடுக்கிற ஒவ்வொரு அடிக்கும் நியாயமான காரணம் இருக்கும். ஒரு சாதாரண அடியே, தேவையா இருக்கும் போது பன்மடங்கு பரிமளிக்கும். இதிலும் அப்படியே. ஸ்டன்ட் சில்வா பிளான் போட்டு செய்திருக்கார்.

அனிருத் பாடல்கள் நல்ல ஹிட்டாகியிருக்கு...அதைப் பற்றி..

அனிருத்தை முதலில் நான் சந்திக்கும் போது ரொம்ப சின்னப் பையன். ‘வேதாளம்’ எமோஷன் பேக் பண்ணின படம். ‘சின்னப் பையனா இருக்கார், ஹேண்டில் பண்ண முடியுமா’னு மனசுக்குள்ளே எண்ணம் இருந்தது. ஆனால், இப்ப புரியுது. படத்தோட இன்னொரு பெரிய ப்ளஸ், அனிருத். பர்சனலா அவர் சாய்பாபா பக்தர். நானும் அப்படித்தான். அவர் கழுத்துல பாபா செயினைப் பார்த்தேன். அனிருத் ரோட்டில் போகும் போது யாரோ ஒருத்தர் அவர் கழுத்துல இந்த செயினை மாட்டிட்டாங்களாம். அடுத்து கொஞ்ச நாள் கழிச்சு ஷீரடி போயிருக்கார். அப்புறம் படத்தில் கமிட் ஆயிட்டார்.

‘வீர விநாயகா’ பாட்டு, ஓப்பனிங்... பிரமாண்டம். ‘ஆலுமா டோலுமா’, பட்டையைக் கிளப்புது. செம லோக்கல். அஜித் இதுவரை இப்படி ஆடினதேயில்லை. இப்போ ஆடியிருக்கார். இந்த வார்த்தைகளை எல்லாம் அவர் வாழ்க்கையில சொல்லியிருப்பாரான்னு சந்தேகம். ஆனாலும் போட்டார் பாருங்க ஆட்டம்... செம..!
ஏதாவது அஜித் பன்ச் சொல்லுங்க...

அவர் ‘தெறிக்க விடலாமா’னு சொன்னார். அவர் சொன்னது வேற மாதிரி இருந்தது. நான் சொன்னா... அது சாதாரண வார்த்தையா இருக்கும். அதனால அவரே சொல்லிக் கேளுங்க ப்ளீஸ்! அவருக்கு கிடைக்கிற ஓப்பனிங், புகழ் எல்லாம் கடவுள் கொடுத்தது'னு மட்டுமே சொல்வார். ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பதில் அவர் உறுதியா இருக்கார். கொல்கத்தா வீதிகளில் அவ்வளவு நேரம் ஓடினார். 20 நாட்கள் தினமும் 2 மணி நேரம் தான் தூங்கியிருக்கார். அதெல்லாம் ஒரு மனசு சார்.

அஜித் - சூரி காம்பினேஷன்..?

சூரி, அஜித்தோட தீவிர ஃபேன். அஜித்தைப் பார்க்கிறவரை எல்லோருக்கும் மிரட்சிதான். அப்புறம் மிரட்சியே மரியாதையா மாறிடும். ‘என்ன சார், அஜித் சார் இவ்வளவு ஈஸியா இருக்கார்’னு என்கிட்ட சூரி கேட்டுக்கிட்டே இருந்தார். சூரி பிறந்த நாளுக்கு அவரை வரவழைச்சு, தன் கையாலே சமைச்சு, பரிமாறி... சூரி நெகிழ்ந்து போயிட்டார். அந்த காம்பினேஷன் படத்தில் தெரியுது.

எல்லாத்தையும் பார்த்துக்கிறீங்க... உங்க உடம்பைப் பார்த்துக்க மாட்டீங்களா?

முன்னாடி 170 கிலோ இருந்தது. இப்ப 115 கிலோவிற்கு இறங்கியிருக்கேன். இந்த ஆறு நாளில் ஆறு மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கேன். கிடைக்கிறதை சாப்பிட்டு, இருக்கிற இடத்தில் தூங்கினா இப்படித்தான் இருக்கும்.

தவிர, நான் சாப்பாட்டுப் பிரியன். வகை வகையா சமைச்சு சாப்பிட பிரியப்படுவேன். வேற கெட்ட பழக்கங்கள் கிடையாது என்பதால் இது மட்டும் தங்கிப்போச்சு. இனி பார்த்துக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions