பொன் விழா ஆண்டில் சிவகுமார்

Bookmark and Share

பொன் விழா ஆண்டில் சிவகுமார்

தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர் - சிவாஜிகணேசன், ரவிச்சந்திரன் - ஜெய்சங்கர், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோரது படங்கள் மக்கள் மனதில் ஒரு இடத்தைப் பிடித்து வந்தாலும் தனக்கென தனிப் பாதையை வகுத்துக் கொண்டு குடும்பப் பாங்கான பல படங்களில் நடித்து தனி இடத்தைப் பிடித்தவர் சிவகுமார். இன்றுடன் அவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. 1965ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த காக்கும் கரங்கள் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இன்றுடன் அந்தப் படம் வந்து 50 ஆண்டுகளாகிறது.

தொடர்ந்து “சரஸ்வதி சபதம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், அன்னை வேளாங்கன்னி, பாபு,  சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், ராஜராஜ சோழன், குமாஸ்தாவின் மகள், வெள்ளிக் கிழமை விரதம், மேல்நாட்டு மருமகள், பட்டிக்காட்டு ராஜா, தேன்சிந்துதே வானம், அன்னக்கிளி, ஆட்டுக்கார அலுமேலு, கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், ராமன் பரசுராமன், அக்னி காட்சி, ஆனந்த ராகம், தீர்ப்புகள் திருத்தப்படலாம், தங்கைக்கோர் கீதம், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், சிந்து பைரவி, உனக்காகவே வாழ்கிறேன், இனி ஒரு சுதந்திரம், மனிதனின் மறுபக்கம், பாசப் பறவைகள், பொன்னுமணி, பொறந்த வீடா புகுந்த வீடா, காதலுக்கு மரியாதை, பூவெல்லாம் உன் வாசம்” உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

அவருடைய நடிப்பில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம், சிந்து பைரவி, இனி ஒரு சுதந்திரம்” ஆகிய படங்கள் மறக்க முடியாத படங்கள். பல முன்னணி நடிகர்களுடனும், பல முன்னணி நடிகைகளுடனும் இணைந்து நடித்திருக்கிறார். பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர் சிவக்குமார். 

தனது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடிகர்களாக அறிமுகமான பின், இவர் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். கடந்த சில வருடங்களாக யார் அழைத்தும் அவர் நடிக்க வரவில்லை.

ஓவியக் கல்லூரியில் படித்து சிறந்த ஓவியராகவும் இருக்கும் சிவகுமார், திரையுலகில் நுழைந்து பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார். திரையுலக மார்க்கண்டேயன் என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறார். தேசிய விருதுகளும், மத்திய அரசின் விருதுகளும் இவருக்கு இதுவரை வழங்கப்படாதது பெரும் குறையே. சிவகுமாருக்கு நமது இனிய பொன்விழா ஆண்டு வாழ்த்துகள்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions