'விஷால், மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கின்றவா புதுப் படங்கள்?' - சுரேஷ் காமாட்சி

Bookmark and Share

'விஷால், மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கின்றவா புதுப் படங்கள்?' - சுரேஷ் காமாட்சி

நேற்று நெருப்புடா பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். தமிழ்த் திரைப்பட பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்ட ஒரு விழாவாக அமைந்திருந்தது.

சிவாஜி அய்யாவின் குடும்பத்திற்கே உரிய அன்பால் கூடிய கூட்டம் அது. விக்ரம் பிரபுவுக்கும் ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் டீமுக்கும் என் வாழ்த்துகள்.

விழாவில் விஷால் பேசும்போது, திரைப்படங்களுக்கான விமர்சனத்தை மூன்று நாட்கள் கழித்துத்தான் எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

படம் நமது முதலீடு. ஆனாலும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிட நமக்கு உரிமையில்லை. அப்படியே கேட்டுக்கொள்வதாக இருந்தாலும், நாம்தான் ரெண்டு நாட்களுக்கு முன்னாடியே பி ஆர் ஓவை அழைத்து அவர்கள் மூலம் பத்திரிகையாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டுகிறோம்.

விமர்சனம் என்பதே கருத்து பரிமாற்றம். அது சரி தவறு என்பதை பார்ப்பவன் தீர்மானிக்க வேண்டியது. விமர்சனம் வியாபாரமல்ல. எனக்கு மூன்று நாட்கள் விமர்சனம் வேண்டாமென்றால், படத்தைக் காட்டாமல் விட்டு விடலாமே?

தவிர, அந்த மூன்று நாட்கள் விமர்சனம் வரவில்லையென்றால் படத்தை திரையரங்கிலிருந்தே எடுத்துவிடுகிறார்கள்.

சிறுபடங்கள் ஜோக்கர், மாநகரம், துருவங்கள் 16, கடுகு, 8 தோட்டாக்கள் போன்ற படங்கள் ஓடியதே விமர்சனங்களால்தான்.

பெரிய படங்களுக்குத்தான் விமர்சனங்கள் நன்றாக இருந்தால் ஓவராக புகழ்வதும், சுமாராக இருந்தால் அதை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்குவதும் நடக்கிறது.

இருமுகன், கபாலி படங்கள் விமர்சனத்துக்குப் பின்பே வரவைப் பார்த்தன. ஆரம்ப கட்ட முட்டுக்கட்டைகளை அடித்து நொறுக்கியது விமர்சனங்கள்தான்.

பெரிய படங்களுக்கு முதல் மூன்று நாட்கள் பார்வையாளர்கள், ரசிகர்கள் வந்துவிடுகிறார்கள். சின்னப்படங்களுக்கு அப்படி வருவதில்லை.

பார்வையாளர்கள், ரசிகர்கள் வராத பட்சத்தில் முதல் மூன்று நாட்களுக்கு படத்தை திரையரங்கிலிருந்து தூக்கிவிடாமலிருக்க முதலில் வழிவகை செய்ய வேண்டும். திரையரங்கோடு தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம் செய்யவேண்டும். முதல் மூன்று நாட்களுக்கும் வெளியிடப்படும் திரையரங்கில் எல்லா காட்சிகளும் கூட்டம் இருக்கோ இல்லையோ ஓட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வரமுடியுமா? அப்படி முடியாதபோது சிறு படங்கள் பெரும்பாலும் விமர்சனமில்லையென்றால் கட்டாயம் பாதிக்கப்படும்.
திரு. விஷால், படங்கள் ஓடவேண்டும் என்ற ஆதங்கத்தில் பேசுகிறார் என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாம் நல்ல படங்களை எடுப்பதை விட்டுவிட்டு விமர்சனத்தை நிறுத்துவது முறையாகாது.

என்னைப் பொருத்தவரை விமர்சகர்கள் குறைந்த பட்ச கருணையோடுதான் நடந்துகொள்கிறார்கள் என்பேன்.

பல சிறுபடங்களுக்கு எங்கே நாம் குறைத்து எழுதிவிட்டால் அந்தப் படம் பாதிக்கப்படுமோ என விமர்சனம் எழுதுவதேயில்லை அவர்கள்.

ஒரு படத்தை ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு தெரியப்படுத்துவதும் அவர்கள்தான். மூன்று நாள் கழித்துத்தான் விமர்சனம் எழுத வேண்டுமென்றால் அவர்கள் செய்தி போடுவதும் படம் வெளியானபிறகு போடட்டுமா எனக் கேட்க மாட்டார்களா?

மற்றொன்று சுமாராக இருக்கும் படங்களைத் தூக்கி நிறுத்த முயற்சிப்பதில் பல பத்திரிகை நண்பர்கள் பார்வையாளர்களிடம் கேவலமாக திட்டு வாங்கியிருக்கிறார்கள்.

நாம் நம் பக்கம் இருக்கும் குறைகளை களைய முயல்வோம். நல்ல படங்களைத் தர முயற்சிப்போம். வியாபார முறையை முறைப்படுத்துவோம். அப்படி முறைப்படுத்துவதின் மூலம் தோல்வியடையும் படங்களுக்கான நஷ்டத்தை சரிக்கட்ட வழிமுறைகளை கண்டறிவோம்.

ஒரு சிலர் விளம்பரம் தரவில்லையென்றால் வேண்டுமென்றே படத்தை சிதைக்க முயல்வார்கள். அப்படிப்பட்ட நேர்மையற்ற விமர்சகர்களை அடையாளங்கண்டு சினிமாவை விட்டே அகற்ற முயலலாம்.

கைப்புண்ணுக்கு கண்ணாடியைத் தேடாமல் நேரடியான பார்வையை ஏற்படுத்துவதுதான் ஆரோக்கியமான சினிமாவை உருவாக்கும். அவர்கள் நல்லது செய்யும்போது கண்டுகொள்ளாத நாம்தான் விமர்சிக்கும்போது கண்டிக்கிறோம்.
சிறு படங்களுக்கு விமர்சனம் முன்னாடியே வருவதுதான் நன்மை தருகிறது. பெரிய படங்கள் மவுத்டாக் என்ற விமர்சனத்தில்தான் அதிகம் தோல்வியடைகிறது.

இது எனது பார்வைதான். என்னடா சுரேஷ் காமாட்சி எப்போதும் எதிர்க்கருத்தே முன் வைக்கிறார்னு நினைக்க வேண்டாம். நல்ல காரியங்கள் நடைபெறும்போது முதல் வாழ்த்தும் பாராட்டும் என்னிடமிருந்துதான் இருக்கும்.

உங்களுக்கு இருக்கும் மாற்றுக் கருத்தை தயாரிப்பு அனுபவமுள்ளவர்களிடமும் அனைத்துத் தரப்பு தயாரிப்பாளர்களிடமும் விவாதித்தால் விமர்சனங்கள் மூலம் நல்ல படங்களை மேலும் வலுவான வியாபாரத்திற்கு உயர்த்தலாம்.

-சுரேஷ் காமாட்சி,

தயாரிப்பாளர் & இயக்குநர்


Post your comment

Related News
சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்
வாவ்.. கீர்த்தி சுரேஷா இது? ரசிகர்களை ஷாக்காகிய புகைப்படங்கள்.!
விஸ்வாசம் படத்தில் இவர் இல்லையா? - ரசிகர்கள் அதிர்ச்சி.!
முன்னாள் முதலமைச்சருக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்? - வெளிவந்த அதிரடி தகவல்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
கீர்த்தி சுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions