விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்

Bookmark and Share

விஷால், முதலில் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற முயற்சி பண்ணுங்க! - தங்கர் பச்சான்

எந்தப் பக்கம் திரும்பினாலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களை வீதியில் கதறவிட்டு நாமும் அரசாங்கங்களோடு சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களின் தேவைகளுக்காகவும், ஊதியங்களுக்காகவும் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்.ஆனால், விவசாயிகள் மட்டும் காலம் முழுவதும் போராடிகொண்டே இருக்க வேண்டியதுதான்.

அவர்கள் நமக்கு தேவையான உணவுக்காகவும் சேர்த்துதான் போராடுகிறார்கள் என்பது புரியாமல் பொதுமக்கள் எனும் போர்வையில் நாம் எல்லோரும் விலகிக்கொண்டு விட்டோம். விவசாயிகளை கெஞ்ச விடுவது நமக்கும், நம் தேசத்துக்கும் அவமானமில்லையா? போராட்ட இடங்களை கடந்து போகும்போதும், ஊடகங்களில் காணும்போதும் உடல் கூசி கூனிக்குறுக வில்லையா?

ஒரு குண்டூசியைத் தயாரிப்பவன் கூட அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனே விலை வைத்துக்கொள்கிறான். 130 கோடி மக்களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து தரும் உழவனால் அவன் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட நாடுதான் இது. பிற ஊழியர்களுக்கும் ,அரசு ஊழியர்களுக்கும் சம்பளக் கமிஷன் உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரையின்படி விலைவாசிக்கேற்றப்படியும் மற்ற விலை உயர்வுகளுக்கேற்றப்படியும் சம்பளத்தை உயர்த்திக் கொள்கிறார்கள்.

அதேபோன்ற நீதி விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களுக்குப் பின் 2004 ஆண்டில் விவசாய கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதைச் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு குடும்பம் முழுவதுமே சேர்ந்து நான்கு மாதங்களோ, ஆறு மாதங்களோ, ஒரு வருட முழுவதுமோ இரவு பகலாக உழைக்கிறார்கள். அறுவடைக்குப்பின் அவர்கள் முதலீடு செய்த பணம் கூட திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அத்தனை பேர்களுக்கும், அவ்வளவு கால உழைப்பையும் கணக்கிட்டு அதற்கான ஊதியம்,முதலீடு,அதற்குமேல் கூடுதலாக லாபம் என சேர்த்து உற்பத்திப் பொருளுக்கான விலை கொடுத்தால் விவசாயிகள் எதற்காக போராடப் போகிறார்கள். இதைச் செய்யாமல் நிவாரணத்தையும், மானியத்தையும், இலவசத்தையும் தந்து அரசாங்கம் அதன் கடைமையில் இருந்து நழுவி விடுகிறது. இதைச் செயல்படுத்தாத வரை எந்த காலத்திலும் விவசாயிகளின் பிரச்சனை தீரவே தீராது. அதுவரை தற்கொலைகளும் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதைப் புரிந்து கொள்ளாமல் நடிகர் விஷால் போன்றவர்கள் ஏதோ ஒரு விவசாயின் வங்கிக்கடனை மட்டும் அடைக்க பணம் கொடுப்பதும், விவசாயத்திற்கு உதவுவதற்காக நிதி திரட்டப்போகிறேன் என சொல்வதும், ஒரு சினிமா டிக்கெட் கட்டணத்தில் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு தரப்போவதாக அறிவிப்பதும் இனி தொடரக்கூடாது. இது போன்ற காரியங்கள் விவசாயிகளுக்கு ஒரு விழுக்காடு கூட பயனிளிக்காது.

விஷால் இன்று மற்ற எல்லா நடிகர்களை காட்டிலும் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என இரண்டிலுமே முதன்மை பொறுப்புக்களை வகிக்கிறார். தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 200 படங்களுக்கு மேல் தயாரிக்கப்படுகிறது. அதில் ஒரே ஒரு படம் கூட விவசாயிகளின் சிக்கலையும், அவர்களின் வாழ்வியலையும் பேச மறுக்கிறது. சில நேரங்களில் ஒன்றிரண்டு படங்கள் உருவானாலும் அவை அறிமுக நடிகர்கள் நடித்தபடங்களாகவே இருக்கின்றன. எவ்வளவோ திறமை வாய்ந்த நடிகர்கள் நம்மிடம் இருந்தும் இந்த தமிழ் சமூகத்திற்கு அவர்களால் எந்த பங்களிப்பும் இல்லாமல் போய்விடுகிறது. இவர்கள் எவ்வளவு காலத்துக்குத்தான் மக்களின் பலவீனங்களை குறிவைத்து சமூக முன்னேற்றத்தை பற்றி கவலையோ, அக்கறையோ கொள்ளாமல் மொழி, பண்பாடு,கலாச்சாரத்தை சீரழிக்கும் செயலை செய்துகொண்டே, கதாநாயகன் என்று சொல்லிக்கொண்டு தனிமனித போற்றுதலை வளர்த்து இயல்புக்கு மாறான பொய்யான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.

திரைப்படக் கலையை பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருபவர்களால் எவ்வாறு விவசாயிகளின் பிரச்சனை பற்றி மட்டும் கவலை கொள்ள முடிகிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை அது உண்மையான கவலையாக இருந்தால் ஒவ்வொரு கதாநாயக நடிகரும் ஆண்டுக்கு ஒரு மாதத்தை ஒதுக்கி சமூக நலன், முனேற்றம் குறித்து சிந்தித்து ஒரு படமாவது நடித்திருப்பார்கள்.

இருபது ஆண்டுகள் , முப்பது ஆண்டுகள் அதற்கு மேலும் கூட கதாநாயகர்களாக இருக்கும் நடிகர்களும் ஒரே ஒரு படத்தில் கூட விவசாயிகள் குறித்து கவலைப்பட்டதில்லை. விஷால் மனது வைத்திருந்தால் அவர் அறிமுகமாயிருக்கிற இந்த பதினைந்து வருடங்களில் தமிழகர்கள் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று குறித்து ஒரு படமாவது நடித்து இருப்பார். விஷால்தான் கதையை தேர்வு செய்கிறார். கதாநாயகிலிருந்து தயாரிப்பாளர் வரை அவர் எடுக்கும் முடிவுதான் எனும் போது இதைச் செய்ய எந்த தடையுமில்லை. ஈழத் தமிழர்களின் துயரம், போராட்டம் குறித்த 'தாய் மண்' என்னும் கதையை நான் அவரிடம் சொல்லி அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கத் தயாராக இருந்த போதும் ஏனோ அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

உண்மையிலேயே இப்போது விஷால் எதையாவது விவசாயிகளுக்கும், அவருக்கு வாழ்வு தந்த திரைப்படத்துறைக்கும் செய்யவேண்டும் என்று நினைத்தால் இந்த கோரிக்கையை செயல்படுத்தட்டும்.


முதலில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்ள நீங்கள் முயற்சி செய்யுங்கள். அவைகளை புரிந்த பின் உங்களுக்கு தெரிந்த நடிப்புக்கலையின் மூலம் அவர்களின் போராட்ட வாழ்க்கையான பிரச்சனைகளை உலகிற்கு திரைப்படங்கள் மூலம் தெரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.

திரைப்படக்கலை உருவாகி நூறு ஆண்டுகள் கடந்த நிலையில் உலகம் முழுக்க அந்த பகுதி மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் சிக்கல்களையும் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் இன்னும் நடைமுறைக்கு உதவாதபடி கதாநாயகன் என்கிற பேரில் வன்முறைகளை விதைத்துக்கொண்டும், பெண்ணுடலை சந்தைப்படுத்தி ஆடவிட்டுக்கொண்டும் அடுத்த தலைமுறைகளைக் கூட தப்பிக்க விடாமல் பொய்யான உலகத்தில் சிக்கவைத்து இயல்பான திரைப்படம் ஒன்றைகூட உருவாக்காமல் இருக்கிறீர்கள் .அதற்காக முதலில் நீங்கள் இதுபற்றி மட்டும் கவலைப்படுங்கள்.

அடுத்ததாக, தயாரிப்பாளர்களின் பணத்திலிருந்து ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய் தருவதாக அறிவித்திருக்கிறீர்கள். நானும் ஒரு தயாரிப்பாளன் என்கிற முறையில்தான் இதைக் கேட்கிறேன். நீங்கள் எத்தனையோ படத்தில் நடித்திருக்கிறீர்கள், பல படங்களை சொந்தமாகவும் தயாரித்து இருக்கிறீர்கள்! அதில் எத்தனை படங்களில் முதலீடு செய்த பணம் திரும்பி வந்து இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு வேளை லாபம் கிடைத்திருந்திருந்தால் அது ஒரு சிலருக்குத்தான் என்பதும் தெரிந்திருக்கும். அரும்பாடுபட்டு ஒரு திரைப்படத்தை தயாரித்து முதலீடு செய்த பணம்கூட திரும்பி வராமல் செத்து மடியும் விவசாயிகளின் நிலைதான் இன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை. தயாரிப்புச் செலவில் பாதிக்கும் மேல் நடிகர்களுக்கே போய்விடுகிறது. அதனால் தான் தயாரிப்பு செலவு அதிகமாகி நூற்றுக்கு 95 தயாரிப்பாளர்கள் நட்டப்பட்டு திரைத்துறையை விட்டேப் போய்விடுகிறார்கள்,தற்கொலையும் செய்துகொண்டுவிடுகிறார்கள். எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை லாபம் என கேட்கிற பணத்தை வாங்கிக்கொண்டு சென்று விடுகிறீர்கள்.


உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால் நீங்கள் பதவியில் இருந்த இரண்டாண்டு காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நடிகர் சங்கத்தில் சம்பள கட்டுப்பாடு விதிகளை உருவாக்கி தயாரிப்பாளர்களை காப்பாற்றி இருக்கலாம். லாபம் வராமல் போனாலும் முதலீடு செய்த பணமாவது திரும்பிவர உத்தரவாதம் கிடைத்திருக்கும். நடிகர்கள் வாழ்ந்தால் போதும் என நினைக்கும் உங்களிடத்திலேயே தயாரிப்பாளர் சங்கமும் வந்துவிட்டது. கடனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் விவசாயிகள் மட்டுமில்லை, தயாரிப்பாளர்களும்தான் என்பது விஷாலுக்கு தெரியாமலில்லை.

முதலில் நடிகர்களை ஒருங்கிணைத்து தயாரிப்பாளரே நஷ்டம் முழுவதையும் ஏற்கும் நிலையிலிருந்து விடுவிக்க லாபம், நஷ்டம் இரண்டிலும் பங்கு வகிக்கும் புதிய நிபந்தனைகளை உருவாக்கி அழிந்து வரும் தயாரிப்பாளரைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு விவசாயிகளுக்கு உதவுவது பற்றி நீங்கள் கவலைப்படலாம். உணவு படைத்த விவசாயியாகவும், மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளனாகவும் இருக்கின்ற தன்மானமுள்ளவன் என்பதால்தான் இந்த வேண்டுகோளை உங்களிடத்தில் நான் முன் வைக்கின்றேன்.

- தங்கர் பச்சான்


Post your comment

Related News
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்
சர்வதேச திரைப்பட சம்மேளனம் சார்பில் அமிதாப்ச்சனுக்கு சிறந்த பண்பாளர் விருது அறிவிப்பு
உலகிலேயே நம் நாட்டில் தான் சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர்: தங்கர்பச்சான் காட்டம்
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions