
ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் 73-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் மெக்சிகோவை சேர்ந்த பிரபல இயக்குனரான அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு (Alejandro Gonzalez Inarritu) இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "தி ரெவெனன்ட்" (The Revenant) சிறந்த படத்துக்கான விருதை பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குனர் அலெஜான்ட்ரோ கான்ஸாலெஸ் இனரிட்டு-வுக்கு சிறந்த இயக்குனர் விருதும், கதாநாயகனாக நடித்துள்ள லியோனார்டோ டிகேப்ரியோ-வுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவமாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடுக்காட்டில் சிக்கிக்கொள்ளும் கதாநாயகன் லியோனார்டோ டிகேப்ரியோ முரட்டுக்கரடியால் தாக்கப்பட்டு, குற்றுயிராக கிடந்து, அங்கிருந்து தப்பிவரும் கதையம்சமும், கதைக்கேற்ப பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
தாய்க்கும் மகளுக்குமிடையிலான மென்மையான பந்தத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "ரூம்" (Room) என்ற படத்தில் தாய்மையின் உள்ளுணர்வுகளை தனது சிறப்பான நடிப்புத்திறனால் மெருகூட்டி, வெளிப்படுத்திய பிரையி லார்சன் (Brie Larson) சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளார்.
"கிரீட்" (Creed) என்ற படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த துணைநடிகர் விருது சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கும், "ஸ்டீவ் ஜாப்ஸ்" (Steve Jobs) படத்தில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ‘டைட்டானிக்’ நாயகி கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த துணைநடிகை விருதும் வழங்கப்பட்டுள்ளது.
நாடகம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான சிறந்த நடிகையாக தாராஜி பி. ஹென்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Post your comment