கே.பாலசந்தர் என்ற நிலவின் நிழல் நான் ! -உத்தமவில்லன் ஆடியோ விழாவில் கமல் உருக்கமான பேச்சு

Bookmark and Share

கே.பாலசந்தர் என்ற நிலவின் நிழல் நான் ! -உத்தமவில்லன் ஆடியோ விழாவில் கமல் உருக்கமான பேச்சு

கமல்ஹாசன் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள படம் உத்தமவில்லன். இந்த படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேடு சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.

6.10 மணிக்கு தொடங்கி இரவு 9.25 மணிக்கு நிறைவடைந்தது. நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கிய இவ்விழாவில், கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, ரமேஷ்அரவிந்த், விஜயசேதுபதி, கெளதமி, ஜிப்ரான், விவேகா, மதன் கார்க்கி, பேச்சாளர் ஞானசம்பந்தம், வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், கேயார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கமல் பேசும்போது,

உத்தமவில்லன் படத்தில் எனது மகாகுரு கே.பாலசந்தர் அவர்கள் நடிக்க சம்மதித்ததே பெருமையான விசயம். அவர் மார்க்கதரிசி என்றொரு கேரக்டரில் நடித்துள்ளார். அந்த கேரக்டரில் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நான்தான் அவரை கட்டாயப்படுத்தினேன். 43 வருடங்களாக எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த என் குருவே எனது கதையில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

மேலும், அவர் நடித்த காட்சிகளை அவருக்கு போட்டுக்காட்ட வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டேன். அவரும் பார்க்க வேண்டும் என்று சொன்னார். ஆனால் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதே எதிர்பாராதவிதமாக திடீரென்று அவர் இறந்து விட்டார். இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. கே.பாலசந்தர் என்ற அந்த நிலவின் நிழல்தான் நான்.

அதனால் அவர் விட்டுச்சென்ற பணியை கடமையாகக்கொண்டு செயல்படுத்தப்போகிறேன். அந்த வகையில், அவர் பணியை தொடரும் ஒரு வேலைக்காரன் நான். சினிமாவில் இந்த வாழ்க்கை எனக்கு அவர் கொடுத்தது. அவர் மட்டும் சரியான நேரத்தில் என்னை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறு மாதிரியாக போயிருக்கக்கூடும். இவர் கண்ணில் நான் பட்டதால்தான் பெரிய நடிகன் ஆனேன். சகோதரர் ரஜினியை கூட கே.பி பார்க்கவில்லையென்றாலும் முரட்டுக்காளை போன்ற படங்கள் மூலம் வந்திருப்பார்.

ஆனால் நான் வந்திருக்கவே மாட்டேன். அப்படிப்பட்ட என் குருநாதரை என் நெஞ்சில் ஏந்தி அவர் பணியை திறம்படி செய்வதுதான் ஒரு சீடனான எனது முக்கிய கடமையாக கருதுகிறேன். இந்த படத்துக்காக லிங்குசாமியிடம் முதலில் இரண்டு கதைகள் சொன்னேன். ஆனால் அதையடுத்து மூன்றாவதாகவும் ஒரு கதையை சொன்னேன்.

அந்த கதையைத்தான் இப்போது படமாக்கியிருக்கிறேன். அதோடு, இந்த கதையை திருப்பதி பிரதர்சுடன் இணைந்து எனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்ததால் எனக்கு முழு சுதந்திரம் கிடைத்தது. அதனால்தான் படமும் எதிர்பார்த்தபடியே வந்திருக்கிறது. மேலும், இப்போதெல்லாம் யாருமே சினிமா பாடல்களை படித்துப்பார்ப்பதில்லை.

கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால், நானெல்லாம் எம்ஜிஆர் நடித்த படங்களின் பாட்டு புத்தகங்களை வாங்கி அதில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து கொள்வேன். எம்ஜிஆர் படங்களில் அனைத்து பாடல்களும் எனக்கு தெரியும். நான் பாடல்கள் எழுதுவதற்கு அவர் படங்களில் இடம்பெற்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல்களே முக்கிய காரணம். அதோடு, நான் ஓரளவு இசையை தெரிந்து வைத்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இளையராஜாதான்.

100 படங்களுக்கு அவருடன் வேலை செய்துவிட்டு இசை தெரியலேன்னா என்னைப்போன்ற மடையன் யாரும் இருக்க முடியாது. அதேபோல், தமிழ் உச்சரிப்பை நான் சிவாஜியிடமிருந்து கற்றுக்கொண்டேன். இப்படி ஒவ்வொரு விசயங்களையும் மிகச்சிறந்த கலைஞர்களிடமிருந்துதான் நான் பயின்றிருக்கிறேன்.

மேலும், இந்த உத்தமவில்லன் ரொம்ப வித்தியாசமான கதைக்களம். இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. அதற்காக இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் நாயகிகளாக நடித்துள்ளவர்களில் பூஜாகுமார், போன படத்தில் செய்யாததை இந்த படத்தில் செய்துள்ளார்.

ஆண்ட்ரியோ, இதுவரை எந்த படத்திலும் செய்யாததை இந்த படத்தில் செய்துள்ளார். அதேபோல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பூ பார்வதியும் பிரமாதமாக நடித்துள்ளார். இவ்வாறு கமல் பேசினார்.

 


Post your comment

Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
400 தியேட்டர்களில் உத்தம வில்லன் இன்று ரிலீஸானது!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions