
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில், சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்த வாலு படம் கடந்த மூன்று வருடங்களாக பல தடவை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் குறித்த தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.
கடைசியாக ஜூலை 17- ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், வாலு படம் தொடர்பாக நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் போட்ட மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் வாலு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேஜிக் ரேஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வாலு படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் ஜூலை 17- ஆம் தேதி அன்று வாலு படம் வெளியாகவில்லை. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
இதற்கிடையில் மேஜிக் ரேஸ் நிறுவனத்துக் கொடுக்க வேண்டிய 10 கோடியைக் கொடுத்து செட்டில்மெண்ட் செய்யும் முயற்சிகள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
மேஜிக் ரேஸ் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டால் வழக்கை வாபஸ் வாங்க வைத்துவிடலாம் என்றும் அதன் பிறகு வாலு படத்தை வெளியிட சிக்கல் இருக்காது என்றும் சொல்லப்பட்டது. லேட்டஸ்ட் தகவல்.... நிக் அர்ட்ஸ் நிறுவனத்துக்கும், மேஜிக் ரேஸ் நிறுவனத்துக்கும் அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மெண்ட் முடிந்துவிட்டதாம். எந்த நேரத்திலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
Post your comment