நடிகர் சங்க கணக்குகளில் தவறுகள் நடந்து இருப்பது போல் குற்றம் சாட்டுவது வருத்தம் அளிக்கிறது.: வாகை சந்திரசேகர்

Bookmark and Share

நடிகர் சங்க கணக்குகளில் தவறுகள் நடந்து இருப்பது போல் குற்றம் சாட்டுவது வருத்தம் அளிக்கிறது.: வாகை சந்திரசேகர்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் புதிதாக பொறுப்புக்கு வந்துள்ளனர். முந்தைய நிர்வாகத்தினர் 3 மாதங்களாகியும் வரவு-செலவு கணக்கு விவரங்களை ஒப்படைக்கவில்லை என்று இவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் 2014-15 ஆண்டுக்கான நடிகர் சங்க வரவு- செலவு கணக்குகளையும் நடிகர் சங்க அறக்கட்டளையின் 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான வரவு-செலவு கணக்குகளையும் சரியான ஆதாரங்களோடு சமர்ப்பிக்காததால் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்படும் என்று அறிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘நடிகர் சங்க கணக்குகளில் தவறுகள் நடந்து இருப்பது போல் புதிய நிர்வாகிகள் குற்றம் சாட்டுவது வருத்தம் அளிக்கிறது. நான் மூத்த நடிகர். 40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்.

பொது வாழ்க்கையில் தூய்மையை கடைபிடிக்கிறேன். நடிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் நடிகர் சங்க பொருளாளர் பொறுப்பை ஏற்றேன். பதவியில் இருந்த காலத்தில் நேர்மையாக செயல்பட்டுள்ளேன்.

சங்க அலுவலகத்தில் எனது அறையில் இருந்த நாற்காலி, மேஜை, டி.வி போன்றவற்றை கூட என் வீட்டில் இருந்து தான் எடுத்து வந்து பயன்படுத்தினேன். சரத்குமாரும் அப்படித்தான் செய்தார்.

நடிகர் சங்க வளர்ச்சிக்காக சரத்குமார் கடுமையாக உழைத்தது எனக்கு தெரியும். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய போது, நடிகர் சங்க அறக்கட்டளையில் ரூ.1 கோடியே 10 லட்சம் இருப்பில் இருந்தது.

அதன்பிறகு சரத்குமார் கலைநிகழ்ச்சி உள்பட பல்வேறு வழிகளில் அறக்கட்டளைக்கு வருவாய் ஈட்டினார். நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் இருந்து 3 தடவை தலா ரூ.25 லட்சம் வீதம் 75 லட்சம் ரூபாயை தனது சொந்த முயற்சியால் வாங்கி கொடுத்தார்.

நடிகர் சங்கத்தின் அருகில் இருந்த குடியிருப்பில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதை நடிகர் சங்கத்தின் பெயரிலேயே பதிவு செய்து கொடுத்தார்.

தேர்தலுக்கு முன்பு நடிகர் சங்க இடத்தை ரூ.60 கோடிக்கு விற்று விட்டனர் என்றும், ரூ.100 கோடிக்கு விற்று விட்டனர் என்றும் பழி சுமத்தினர்.

அது பொய் என்பதை தேர்தல் முடிந்ததும் தாய் பத்திரம் உள்பட அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைத்து நிரூபித்தார். இதையெல்லாம் செய்த அவரை பாராட்டுவதை விட்டு பழி சுமத்துவது நியாயம் இல்லை.

நடிகர் சங்கம் மற்றும் அறக்கட்டளை கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதற்கு விளக்கங்கள் கேட்டார்கள். பதில் சொல்ல அவகாசம் அளிக்காமல் அவதூறு பரப்பி உள்ளனர்.

மின்சாரம் உள்ளிட்ட செலவுகள், ஊழியர்கள் சம்பளம் என நடிகர் சங்கத்துக்கு மாதம் ரூ.2 லட்சம் செலவாகிறது. போராட்டங்கள், விழாக்கள் போன்றவற்றுக்கும் செலவு செய்யப்பட்டு உள்ளது. இதையெல்லாம் சிந்திக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு குறை சொல்கிறார்கள்.

புதிதாக பொறுப்பு ஏற்றதும் ஏற்கனவே இருந்த நடிகர் சங்க ஊழியர்களை ஒட்டு மொத்தமாக வெளியேற்றி விட்டு புதிய ஊழியர்களை நியமித்து இருக்கிறார்கள். ரசீதுகளை எடுக்க கூட உள்ளே அனுமதிக்கவில்லை.

இதற்கு பின்னால் இருப்பது யார்? எதற்காக தூண்டி விடுகிறார்கள்? என்று புரியவில்லை. புதிய நிர்வாகிகள் நிதானமாக செயல்பட வேண்டும். நடிகர் சங்கத்தில் எந்த தவறும் நடக்கவில்லை.

எனவே எங்களுக்கு பயம் இல்லை. சட்ட நடவடிக்கைகளை சந்திக்க தயாராக இருக்கிறோம்.’’

இவ்வாறு வாகை சந்திரசேகர் கூறினார்.


Post your comment

Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
விமலின் விபரீத முடிவுக்கு பயந்த இயக்குனர் பூபதி பாண்டியன்
‘மன்னர் வகையறா’ தமிழக ரைட்ஸை கைப்பற்றிய 'சினிமா சிட்டி'..!
விஜய் அரசியலில் குதிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி
என் மூச்சு நின்று விடும் ! விஜயின் அப்பா உணர்ச்சிவசம்
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
விஜயின் அப்பாவால் பெரிய ஹீரோவாகிய பிரபலம்! யார் அவர்
என்னை பிரித்து விட்டார்கள், விஜய்யின் தந்தை பரபரப்பான பேச்சு
விஜய்யின் தந்தைக்கு ஏற்பட்ட சோகம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions