காதல் திருமணம் செய்த துணை நடிகை காதலனுடன் போலீசில் தஞ்சம்

Bookmark and Share

காதல் திருமணம் செய்த துணை நடிகை காதலனுடன் போலீசில் தஞ்சம்

விருதுநகர் ஏ.டி.பி. காம்பவுண்டை சேர்ந்த கிருஷ்ணன் மகள் வைஜெயந்தி (வயது 21). இவர் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் வெயில், குட்டிப்புலி ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

தற்போது விருதுநகரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகன் பூமாரி முத்து (26). இவர் விருதுநகரில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக வைஜெயந்தியும், பூமாரி முத்துவும் காதலித்து வந்தனர். அடிக்கடி இவர்கள் தனிமையில் சந்தித்து கொண்டனர்.

இந்த தகவல் வைஜெயந்தியின் அக்காள் கணவருக்கு தெரியவந்தது. உடனே அவரும், குடும்பத்தினரும் வைஜெயந்தியை கண்டித்ததோடு, காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறவினர்களின் கெடுபிடி காரணமாக வைஜெயந்தி தனது காதலனை சந்திக்க முடியவில்லை. இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி பூமாரிமுத்துவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி காதலர்கள் 2 பேரும் நேற்று தங்களது வீட்டை வீட்டு வெளியேறினர்.

பின்னர் விருதுநகர் முருகன் கோவிலில் பூமாரிமுத்து, வைஜெயந்தியை திருமணம் செய்து கொண்டார். இதில் அவர்களது நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதன்பின் காதல் ஜோடியினர் பாதுகாப்பு கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அங்கிருந்த போலீசார் இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளிக்குமாறு தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற காதல் ஜோடியினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதமாதா காதல் திருமணம் செய்த பூமாரிமுத்து–வைஜெயந்தி ஆகியோரது குடும்பத்தினரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் வைஜெயந்தியின் காதல் திருமணத்தை அவரது வீட்டார் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து வைஜெயந்தி காதல் கணவருடன் செல்வதாக கூறியதை தொடர்ந்து அவரை காதலருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions