நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது தான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி: கவிஞர் வைரமுத்து பேச்சு

Bookmark and Share

நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவது தான் எழுத்தாளனுக்கு உண்மையான அஞ்சலி: கவிஞர் வைரமுத்து பேச்சு

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் கடந்த மாதம் 23-ந்தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். இவருடைய நினைவை போற்றும் வகையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள உமாபதி அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகித்து பேசினார்.

கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-

எழுத்துலகில் நல்லெழுத்து, வணிக எழுத்து என்று இரண்டு உள்ளது. வணிகச் சந்தையிலும் நல்லெழுத்தை எழுதியவர் அசோகமித்திரன். அவருடைய எழுத்தில் ஆரவாரமில்லை. அலங்காரங்களின் அணிவரிசையும் இல்லை. சத்தியம் மட்டும் அவர் எழுத்தில் அதிகம் இருந்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு மரணம் ஏற்படுகிறது. உடலுக்கு ஏற்படும் மரணத்தால் ஒரு மனிதன் முதல் முறை இறக்கிறான்.

அவனுக்குப் பிறகும் அவனை நினைத்துக் கொண்டே இருக்கும் சமூகத்தின் கடைசி மனிதன் இறக்கும் போது 2-வது மரணம் ஏற்படுகிறது. அசோகமித்திரனை நினைக்கும் மனிதர்கள் இன்னொரு நூற்றாண்டிலும் இருப்பார்கள். அதனால் இப்போதைக்கு அவருக்கு 2-வது மரணம் இல்லை.

நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வில் ஏற்படும் வலியை அவரைப்போல் எதார்த்தமாக எழுதியவர்கள் குறைவு. ‘கரைந்த நிழல்கள்’ என்ற நாவலில் ஒரு தயாரிப்பாளரையும், ஒரு நடிகையையும் படைத்திருக்கிறார். ‘படப்பிடிப்புக்கு வரமாட்டேன்’ என்று ஓர் இளம் நடிகை அடம் பிடிப்பாள்.

எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டுக் கடைசியில் தயாரிப்பாளர், ‘தயவு செய்து வந்துவிடம்மா உன்னை இழிமொழியில் திட்ட விரும்பவில்லை, ஏனென்றால் நீ என் மகளாகக்கூட இருக்கலாம்’ என்று சொல்வார். இப்படி நகையோடு கூடிய வலியும், வலியோடு கூடிய நகையும் அவர் எழுத்தில் இழையோடிக் கொண்டு இருக்கும்.

அவரது ‘புலிக்கலைஞன்’ என்ற சிறுகதையைச் சிறந்ததாகச் சொல்வார்கள். அதைவிட அவரது ‘பிரயாணம்’ என்ற சிறுகதையைத்தான் ஆகச்சிறந்தது என்று அடையாளம் காட்டுவேன். ‘40 ஆண்டுகளாக எழுதும் என்னை எந்த அரசியல் கட்சியும் அழைக்கவில்லை, ஏனென்றால் என்னைப்போன்ற எதார்த்தவாதிகள் அரசியலுக்குத் தேவையில்லை, நாங்கள் எதிர்த்தும் கோஷம் இடமாட்டோம். அவர்களுக்கும் பயன்படமாட்டோம் என்று அரசியல்வாதிகளுக்குத் தெரிந்திருக்கிறது’ என்று அசோகமித்திரன் எழுதியிருக்கிறார்.

வாழும் போது எழுத்தாளர்களைத் திண்டாடவிடுவதும் வாழ்ந்த பிறகு கொண்டாடுவதும் எழுத்தாளனுக்குத் தரப்படும் இரண்டு தண்டனைகளாகும்.

அவருக்கு இனி பூப்போட வேண்டாம், பூஜைசெய்ய வேண்டாம். அவரைப்போன்ற எழுத்தாளர்களின் நூல்களை விமர்சனத்திற்கு இடமின்றி நூலகங்களுக்கு வாங்கி வாசிக்கச் செய்வது தான் அசோகமித்திரனுக்குச் செய்யப்படும் உண்மையான அஞ்சலி என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எழுத்தாளர்கள் ரவி சுப்பிரமணியன், சசிகுமார், மொழிபெயர்ப்பாளர் தனுஷ்கோடி, பதிப்பாளர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக கவிதா முரளிதரன் நன்றி கூறினார். எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காசி விஸ்வநாதன் முரளிதரன், இரா.தங்கதுரை உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

அசோகமித்திரனின் மகனும், பத்திரிகையாளருமான தி.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். 


Post your comment

Related News
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!
இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
வைரமுத்துவை மிகவும் தரக்குறைவான மோசமான வார்த்தையில் விமர்சித்த H.ராஜா
தட்டி தூக்கிய கபிலன் வைரமுத்துவிற்கு முருகன் மந்திரம் பாராட்டு
திரையுலக ஜாம்பவானுக்கு சிலை வைக்கும் வைரமுத்து
தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்: கவிஞர் வைரமுத்து பேச்சு
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
கவிஞர் வைரமுத்து 'ஜெட்லி' ஆடியோ வெளியீட்டில் சொன்ன ரகசியம் என்ன? - வீடியோ
கொடி கம்பங்கள் கூட ஆடை கட்டி உள்ளது: விவசாயிகளால் ஆடை கட்ட முடியவில்லை - வைரமுத்து
தலைமை ஆசிரியர் புகழ் பாடும் 'பள்ளிப் பருவத்திலே'-படம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions