ஐ.நா. கதவுகளை திருக்குறள் தட்டும்- கவிஞர் வைரமுத்து பேச்சு

Bookmark and Share

ஐ.நா. கதவுகளை திருக்குறள் தட்டும்- கவிஞர் வைரமுத்து பேச்சு

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ‘‘திருக்குறள் திருவிழா’’  வில், கவிஞர் வைரமுத்துவுக்கு, ‘வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. 

பின் விழாவில் கவிஞர் வைரமுத்து பேசிய போது, “இந்திய பாராளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதை தமிழுக்கு கிடைத்த தேசிய பெருமை என்று கருதுகிறேன். மனிதர்களின் அடையாளம் முகம். மாநிலங்களின் அடையாளம் மொழி. மொழியின் அடையாளம் இலக்கியம். 

தமிழ் மொழிக்கான இலக்கிய அடையாளமாக, ஞானக் கருவூலமாக திகழ்கிறது திருக்குறள். அது தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது என்ற போதிலும், ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமையானது. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவானது. 

பகவத் கீதை-கடவுள் மனிதனுக்கு சொன்னது. திருவாசகம்-கடவுளுக்கு மனிதன் சொன்னது. திருக்குறள்-மனிதன் மனிதனுக்கு சொன்னது. திருக்குறள் மனிதனை பேசுகிறது. அது தமிழன்-வங்காளி-மலையாளி-மராட்டியன்-தெலுங்கன் என்று இனம் பிரித்துப் பேசவில்லை.

சொல்லப்போனால் தமிழ் என்ற சொல்லே திருக்குறளில் இல்லை. திருக்குறள் நிலம் பேசுகிறது. ஆனால், அது இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று நாடு பிரிக்கவில்லை. 

எல்லா நிலத்துக்கும், எல்லா இனத்துக்கும் காற்றைப் போல், சூரியனைப் போல் பொதுவாகவே திருக்குறள் படைக்கப்பட்டிருக்கிறது. இன்று இந்த உலகத்தின் தலைக்கு மேல் ஆடிக் கொண்டிருக்கிற வன்முறை என்ற கத்திக்கு எதிராக மனித மனங்களை சலவை செய்கிறது திருக்குறள்.

மனித குலத்தின் பெருஞ்செய்தியாக அது அன்பையே ஓதுகிறது. திருக்குறள் தான் டால்ஸ்டாய் என்ற ரஷ்ய படைப்பாளிக்கு அகிம்சையை கற்று தந்திருக்கிறது. 

அகிம்சை என்ற தத்துவத்தை ஜெர்மனியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளில் இருந்து தான் நான் பெற்றுக்கொண்டேன். இது லியோ டால்ஸ்டாயின் ஒப்புதல் வாக்குமூலம். புவி வெப்பமாதல்தான் அகில உலகமும் எதிர்கொள்ள வேண்டிய உடனடி பெரும் பிரச்சினை. 

இன்னும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமானால் 33 விழுக்காடு விலங்கினங்கள் பூமியில் இருந்தே காணாமல் போய்விடும். இப்போது பாரீசில் நிகழ்ந்த பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் எட்டப்பட்டிருக்கிற முடிவு தான் மனித குலத்தின் நிகழ்கால நிமிட தேவை. 

‘‘தாமதப்படுத்த வேண்டியவற்றை தாமதப்படுத்து, தாமதிக்கக் கூடாதவற்றை தாமதப்படுத்தாதே’’ இதைத்தான், ‘‘தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை’’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாக மேலாண்மை தத்துவமாக வள்ளுவம் உலகுக்கு வழங்கியது. இந்த மாத மழையில் எங்கள் சென்னை மூழ்கிவிட்டது.

மழை தண்ணீர் மனிதர்களை குடித்துவிட்டு போய்விட்டது. எங்கள் வானம் பகலை தொலைத்துவிட்டது. இது ஒரு நூற்றாண்டின் பேரழிவு. 

இந்த துயரம் பற்றியும் அதிலிருந்து மீள்வது பற்றியும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறள் எங்களுக்கு வழிகாட்டுகிறது. ‘‘கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை’’ என்பது குறள். ‘‘கெடுப்பதும் மழைதான், கெட்டவர்களை மீண்டும் வாழவைப்பதும் மழை தான்’’ என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.

எங்களை அழித்த மழையின் மிச்சம் எங்கள் பூமிக்கடியில் சேமிப்பாக கிடக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் அந்த நீரை பயன்படுத்தி, மூன்று மடங்கு மகசூல் காண்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

இழப்பை அப்படித்தான் நாங்கள் ஈடு செய்யப் போகிறோம். இந்த மழை சேதத்தை ஈடு செய்வதற்கு மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும். உழைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். பிழைப்பதற்கு நாம் தான் வழி செய்ய வேண்டும்.

ஆதாரங்களை அழித்த அதே மழைநீரை பயன்படுத்தி அவர்கள் ஆதாயங்களை ஈட்டுவார்கள். வள்ளுவர் எங்களுக்கு வழங்கிய வாழ்க்கைப் பாடம் இதுதான். இப்படி வாழ்வுக்கு வழிகாட்டுவதால்தான் திருக்குறள் இன்னும் உயிர்ப்போடு விளங்குகிறது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருவள்ளுவர் கொண்டாடப்படுவதில் இமயம் குமரிக்கு வந்து குடைபிடிப்பதாய் மகிழ்கிறோம். இன்று நாடாளுமன்றத்தின் வாசலை தொட்ட திருக்குறள் ஐ.நா. மன்றத்தின் கதவுகளை தட்டும் நாள் தூரத்தில் இல்லை” என்று அவர் பேசினார்.

 


Post your comment





Related News
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
கலைஞர் புகழ் வணக்கம் கலைஞருக்குக் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல்..!
இந்தியா எழுந்து நின்று அழுகிறது வாஜ்பாய் மறைவுக்குக் கவிஞர் வைரமுத்து இரங்கல்..!
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
காலத்தை வென்று நிற்பார் கலைஞர் - கவிப்பேரரசு வைரமுத்து
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வைரமுத்து எழுதிய பாடலை ரம்யா நம்பீசன் பாடினார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions