பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு ரஜினியை சந்திப்பேன்: விஜயகுமார் பேட்டி

Bookmark and Share

பா.ஜனதாவுக்கு ஆதரவு கேட்டு ரஜினியை சந்திப்பேன்:  விஜயகுமார் பேட்டி

பா.ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட நடிகர் விஜயகுமார், நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அவரது பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஏன் இந்த திடீர் அரசியல் பிரவேசம்? என்ன காரணம்?

பதில்:- இந்த முடிவு திடீரென்று எடுத்தாலும், இதற்கான அடிப்படை காரணம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான். அரசியலில் இருந்தால், மக்களுக்கு பல வழிகளில் உதவி செய்யலாம். எனவே தான் அரசியலில் என்னை இணைத்துக் கொண்டேன்.

கேள்வி: பல கட்சிகள் இருக்கும் போது, பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்து ஏன்?

பதில்: ஊழலற்ற மற்றும் மக்களின் நலனில் அக்கறை உள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். அகில இந்திய அளவில் வாஜ்பாய்க்கு அடுத்து எனக்கு பிடித்த தலைவர் மோடி தான்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அவர் தான் பிரதமராக வருவார் எண்ணினேன். அதே போல் நடந்தது. மேலும் மோடி சொன்னபடி ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே தான் பா.ஜனதாவில் என்னை இணைத்துக் கொண்டேன்.

கேள்வி:- எந்த சட்டசபை தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்கள்? கட்சியில் என்ன பதவி கேட்டு இருக்கிறீர்கள்?

பதில்:- நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து இங்கு வரவில்லை. தேர்தலில் போட்டியிடவும் விரும்பவில்லை. ஏனென்றால் நான் ஒரு தொகுதியில் போட்டியிடும்பட்சத்தில், அந்த தொகுதியில் தான் எனது கவனம் இருக்கும். எனவே பா.ஜ.க. வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வேன்.

கேள்வி:- உங்கள் பிரசாரத்தில் மக்களிடம் எதனை முன்னிலைப்படுத்துவீர்கள்?

பதில்:- ஊழலற்ற ஆட்சி. அதுமட்டுமல்ல மத்திய ஆட்சி என்பது பெற்றோர். மாநில ஆட்சிகள் என்பது பிள்ளைகள். இந்த பெற்றோர்களுக்கு ஏற்ற பிள்ளையாக தமிழகத்திலும் பாரதீய ஜனதா ஆட்சி இருந்தால் மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கும். நிதி உதவி கிடைக்கும்.

கேள்வி:- உங்களது கருத்துப்படி தமிழகத்தில் வேறு ஆட்சி இருந்தால், மத்தியில் ஆளும் பா.ஜனதா எதுவும் செய்யாது என்று சொல்கிறீர்களா?

பதில்:- எதுவும் செய்யாது என்று நான் சொல்லவில்லை. அதிகமாக செய்வார்கள் என்று தான் சொல்கிறேன். உதாரணமாக மழை வெள்ளத்தின் போது, மோடியே நேரடியாக தமிழகம் வந்து இங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி நிதியும் வழங்கி, நமது துயர் துடைத்தார்.

கேள்வி:- மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலமான நமது தமிழகத்தில், பா.ஜனதாவிற்கு இந்த தேர்தலில் எந்தளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

பதில்:- ஒரு போராட்டத்தை வெற்றி இலக்கு என்ற எண்ணத்தில் தொடங்குகிறோம். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி மலருவது எனக்கு மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் வெற்றியாகும்.

கேள்வி:- நடிகர்களுக்கு கொள்கைகள் கிடையாது. சினிமா வாய்ப்பு இல்லாவிட்டால் அரசியல் பக்கம் வந்து விடுவார்கள் என்று சில கட்சிகள் சொல்லிக் கொண்டு இருக்கும் வேளையில் நீங்களும் பா.ஜனதாவில் இணைந்திருக்கிறீர்களே?

பதில்:- ஏராளமான படங்களில் தற்போதும் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதிக வாய்ப்புக்கள் உள்ளது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு கொள்கை இருக்கும் போது நடிகர்களுக்கு மட்டும் கொள்கை இருக்காதா என்ன?. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கையுடன் நான் அரசியல் களம் கண்டு உள்ளேன்.

கேள்வி:- பா.ஜ.க.விற்கு ஆதரவு கேட்டு ரஜினிகாந்தையும், கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தையும் அழைப்பீர்களா?

பதில்: எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. ஆனால் கட்சி உத்தரவிட்டால், இதனை நான் செய்வேன்.

கேள்வி:- உங்களுக்கு உறுதுணையாக, உங்களது மகன் அருண்குமாரும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வாரா?

பதில்:- பா.ஜனதாவுக்கு ஆதரவு என்பது எனது கொள்கை. அவன் கொள்கை பற்றி எனது மகனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

கேள்வி:- வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பதில்:- பணத்திற்காக வாக்களிக்காதீர்கள். நமக்கு யார் நல்ல ஆட்சி தருவார்கள் என்பதனை சிந்தித்து வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.


Post your comment

Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
கேப்டனின் இடி முழக்கம்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions