சென்னையில் நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது

Bookmark and Share

சென்னையில் நடிகர் சங்க செயற்குழு நாளை கூடுகிறது

நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் 24 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி கட்டிட நிதி வசூலிக்கப்பட்டது. இதற்கான வரவு செலவு கணக்குகளை பொருளாளர் கார்த்தி இணையதளத்தில் வெளியிட்டார். இந்த கணக்கு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான கூடுவாஞ்சேரி அருகில் உள்ள வேங்கடமங்கலத்தில் இருந்த 26 சென்ட் நிலத்தை ராதாரவி தன்னிச்சையாக விற்று விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது குறித்து நாளை மறுநாள் (13-ந் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்தும் செயற்குழுவில் விவாதிக்கின்றனர்.

நட்சத்திர கிரிக்கெட் நிதி வசூலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அதிருப்தியாளர்கள் சிலர் சங்க அலுவலகத்தின் முன்னால் சமீபத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த 20 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்படுகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

நடிகர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டமும் நாளை நடக்கிறது. அறங்காவலர்கள் கமல்ஹாசன், நாசர், விஷால், கார்த்தி, ராஜேஷ், எஸ்.வி.சேகர், பூச்சி முருகன், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி ஆகிய 9 பேர் இதில் கலந்துகொள்கிறார்கள்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் வருகிற 27-ந் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடக்கிறது. அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டைகளுடன் வருபவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions