நடிகர் சங்க செயற்குழு 26-ந்தேதி கூடுகிறது

Bookmark and Share

நடிகர் சங்க செயற்குழு 26-ந்தேதி கூடுகிறது

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் சங்கத்துக்கு சொந்தமாக உள்ள 19 கிரவுண்டு நிலத்தில் புதிய கட்டிடம் கட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் 3,148 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 

இவர்களை பற்றிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக உறுப்பினர்கள் பற்றிய கணக்கெடுக்கும் பணியை வருகிற 27-ந்தேதி முதல் நடத்த உள்ளனர். மாவட்டம் தோறும் தனித்தனி குழுக்கள் அனுப்பப்பட்டு இந்த விவரங்களை சேகரிக்கிறார்கள்.

இதுவரை நடித்த படங்கள், நாடக அனுபவங்கள். குடும்ப உறுப்பினர்கள் உள்பட பல தகவல்களை உறுப்பினர்களிடம் கேட்டு அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்கிறார்கள். இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 26-ந்தேதி கூடுகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த கூட்டம் நடக்கிறது. 

சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான வரை படங்கள் உருவாக்குவது, கட்டுமான பணிகளை தொடங்குவது போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கட்டிட நிதி திரட்ட இளம் கதாநாயகர்கள் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிப்பார்கள் என்று விஷால் கூறி இருந்தார். 

இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அனிருத் இசையில் சிம்பு பாடியதாக வெளியான ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டமும் அதே நாளில் நடக்கிறது. கமல்ஹாசன், நாசர், விஷால், கார்த்தி, எஸ்.வி.சேகர், ராஜேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி ஆகிய 8 பேர் அறக்கட்டளை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions