நிவாரண பணிகளில் 50 நடிகர்-நடிகைகள்: வீடு, வீடாக உணவு, துணிமணிகள் வினியோகம்

Bookmark and Share

நிவாரண பணிகளில் 50 நடிகர்-நடிகைகள்: வீடு, வீடாக உணவு, துணிமணிகள் வினியோகம்

தன்னார்வ தொண்டு அமைப்புகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு நிவாரண நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள். 

இடுப்பளவு வெள்ளத்தில் நடந்து சென்றும் படகுகளில் பயணம் செய்தும் வீடுவீடாக உணவு, துணிமணிகள், மருந்து பொருட்கள் போன்றவற்றை விநியோகித்து வருகிறார்கள்.

நாசர், விஷால், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, பார்த்திபன், தனுஷ், பொன்வண்ணன், சித்தார்த், எஸ்.வி.சேகர், ரமணா, சாந்தனு, மயில்சாமி, மோகன், உதயா, அஜய் ரத்னம், ஸ்ரீமன், பசுபதி, பிரேம், மனோபாலா, இமான் அண்ணாச்சி, ஆரி, ரோகினி, சுஹாசினி, வரலட்சுமி, மோகினி, கோவை சரளா உள்பட 50 நடிகர்-நடிகைகள் இந்த நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இசையமைப்பாளர் இளையராஜா, டைரக்டர் மணிரத்னம் ஆகியோரும் போர்வை, உணவுகள் வழங்கி வருகிறார்கள். நடிகர்கள் வட சென்னை, தென்சென்னையில் தனித்தனியாக பகுதிகளை பிரித்துக்கொண்டு நிவாரணங்களை வழங்கி வருகிறார்கள். அவர்களுடன் ரசிகர்மன்றத்தினரும், மாணவர்களும் செல்கிறார்கள். இதற்காக 100 வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு நடிகர்-நடிகையும் வெளிமாநில திரையுலகினருடன் தொடர்புகொண்டு நிவாரண உதவிபொருட்கள் அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர். இதனை ஏற்று தெலுங்கு, மலையாள, கன்னட நடிகர்-நடிகைகள் தினமும் லாரிகளில் உதவிபொருட்களை அனுப்பி வருகிறார்கள். மலையாள நடிகர்கள் குடிநீர் பாட்டில்களை கணிசமாக அனுப்புகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து பால் பவுடர், மருந்து பொருட்களை அதிகம் அனுப்புகிறார்கள். தெலுங்கு நடிகர்கள் துணிமணிகள், மளிகை பொருட்களை அனுப்புகின்றனர், திருப்பூர் தொழில் அதிபர்கள் ஆடைகளை அனுப்பி வைக்கின்றனர். நிவாரணப் பொருட்கள் லாரிலாரியாக வந்து சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளன. 
இந்த பொருட்களை சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளியில் சேகரித்து வைத்து பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு நடிகரும் வேன்களில் அவற்றை ஏற்றிக்கொண்டு போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.

வெள்ளத்தில் தொடர்ந்து நின்று நிவாரணங்கள் வழங்கியதால் நடிகர்-நடிகைகள் பலருக்கு கால்களில் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த பணிகளில் ஈடுபட்ட 50 நடிகர்-நடிகைகளுக்கும் நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. நிலவேம்பு கசாயத்தையும் பாட்டில்களில் அடைத்து வைத்து குடித்துக்கொண்டே நிவாரண பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

‘ரெஸ்க்யூ சென்னை குரூப்’ என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப்பை தொடங்கி அதன்மூலம் அனைத்து நடிகர் நடிகைகளையும் ஒருங்கிணைத்து இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions