நான் ஏன் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வந்தேன் தெரியுமா? - விஷால்

Bookmark and Share

நான் ஏன் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு வந்தேன் தெரியுமா? - விஷால்

தயாரிப்பாளர் சங்கத்தின் பதவிக்கு நான் ஏன் போட்டியிட்டேன் தெரியுமா? எல்லோருக்கும் நல்லது செய்யத்தான் என்று நடிகர் விஷால் பேசினார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 - 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார்.

விஷால் தலைமையில் போட்டியிட்ட 'நம்ம அணி' பெருவாரியாக வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் வெற்றி பெற்றார். துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் ஆகியோர்  வெற்றி பெற்றனர்.

கவுரவ செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா மற்றும் கதிரேசன் வெற்றி பெற்றனர். பொருளாளர் பதவிக்கு விஷால் அணியில் இருந்து போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு வெற்றி பெற்றார். புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவை ரோகிணி தொகுத்து வழங்கினார். முதலில் பேசிய எடிட்டர் மோகன் புதிய நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார். அவர்களுக்கு ராஜ்கண்ணு, எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.டி.குஞ்சுமோகன், ராஜ்கிரண், தாணு, கேயார், ஏ.எல்.அழகப்பன், டி.சிவா ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினர். 

"உண்மையான நாயகன் விஷால். இந்த சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற நாயகன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய காலம் இது. ஒரே வருடத்தில் 2 அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டையுமே விஷால் அணி கைப்பற்றியுள்ளது," என்றார் எடிட்டர் மோகன். 

வெற்றி பெற்ற அனைவருக்கும் பூங்கொத்தும் வாழ்த்தும் தெரிவித்திருந்தார் ரஜினி. தலைவராக பொறுப்பேற்றவுடன் விஷால் பேசியது, "இது ஒரு மிகப்பெரிய குடும்பம். அதனால் தான் அனைத்து சங்கங்களும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். 

மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வந்துள்ளோம். தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது. யார் வந்தாலும் நல்லது செய்ய வேண்டும் என்று உழைக்கிறோம். இன்றைக்கு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் என்ற முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று பேசினோம். நலிந்த என்ற வார்த்தையே இருக்க கூடாது. 

எங்களுடைய அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது. உறுப்பினர்களுக்கு பென்சன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம். விவசாயிகள் பிரச்சினைக்கு ஏதாவது உதவ வேண்டும் என்று பேசினோம்.

தலைப்பு, சென்சார், வரிச் சலுக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானதாக செயல்படும். திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது. 

அது குறித்த முறையான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஒற்றுமையை வைத்து நிறைய விஷயம் செய்யலாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்காக உழைப்பேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்தவுள்ளோம். இந்தாண்டே அவ்விழா நடத்தி 10 கோடி வரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம். 

ஒட்டு மொத்த இந்திய திரையுலகம் ஒன்றிணைந்து இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு 'இசைவோம்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். இவ்விரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக சுமார் 15 கோடி வரை இந்தாண்டுக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம். 

அனைத்து சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது. படம் செய்ய எண்ணம் உள்ள தயாரிப்பாளர் அனைவருக்கும் படம் பூஜைப் போடப்பட்டதிலிருந்து படம் வெளியாகும் வரை என்ன பிரச்சினை என்றாலும் உடன் இருப்போம். மானியம் தொடர்பாக பேச தமிழக முதலமைச்சரிடம் நேரம் கேட்போம். 10 ஆண்டுகளாக மானியம் கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக அவர் நேரம் கொடுக்கும் போது நேரில் பேசி வலியுறுத்திவோம். விஷால் என்பவர் ஏன் போட்டியில் நிற்கவேண்டும். ஏன் 2 பதவிக்கு எனக் கேட்டார்கள். நானும் நிறைய தயாரிப்பாளரிடம் போய் தலைவருக்கு நில்லுங்கள் என்று கேட்டேன். 

ஆனால், இறுதியில் நானே நிற்கவேண்டிய சூழல் வந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும்.... " என்று கூறிவிட்டு மேடையில் முட்டிப் போட்டு வணங்கிவிட்டு "சத்தியமாக நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்தேன்" என்று கண்கலங்க தெரிவித்தார்.


Post your comment

Related News
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் ஓட்டுப் போட முடியுமா?
சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மார்ச் 5-ந்தேதி தேர்தல்
சஸ்பெண்டை திரும்பப் பெற இயலாது - விஷாலுக்கு தயாரிப்பாளர் சங்கம் பதிலடி
விஷால் வருத்தம் தெரிவித்தால் இடைநீக்க ரத்து பற்றி பரிசீலிப்போம்! - தயாரிப்பாளர் சங்கம்
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் அதிரடியாக நீக்கம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions