பெண் வேடங்களில் நடிக்க விரும்பும் கதாநாயகர்கள்

Bookmark and Share

பெண் வேடங்களில் நடிக்க விரும்பும் கதாநாயகர்கள்

கதாநாயகர்கள், ரசிகர்களை சிரிக்க வைக்க பெண் வேடமிடுவதை ஆரம்பகால சினிமாக்களில் பார்க்க முடிந்தது. தற்போது கதை மற்றும் கதாபாத்திரங்களின் தேவைக்காக பல மணி நேரம் ‘மேக்கப்’ போட்டு பெண்ணாக மாறி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். திரையுலக ஜாம்பவான்களாக இருந்த எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் நாடகங்களில் பெண்ணாக நடித்து உள்ளனர்.

சிவாஜி கணேசன் நாடக நடிகராக அறிமுகமானதே சீதை வேடத்தில்தான். குங்குமம், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு படங்களில் சில காட்சிகளில் அவர் பெண் வேடங்களில் வந்தார்.

ரஜினிகாந்த் பணக்காரன் படத்தில், ‘நூறுவருஷம் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும்தான்’ என்ற பாடலில் பெண் வேடமிட்டு சிரிக்க வைத்தார். ‘வீரா’ படத்திலும் ஒரு காட்சியில் பெண்ணாக வந்தார்.

கமல்ஹாசன் ‘அவ்வை சண்முகி’ படத்தில் பெண் வேடமிட்டு நடித்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வேடத்துக்காக அவர் பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்து இருந்தார்.

அவ்வை சண்முகி வெற்றிக்கு இந்த வேடம் பக்கபலமாக இருந்ததுடன் அனைத்து தரப்பினரையும் கவரவும் செய்தது.

தசாவதாரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் வயதான பெண்ணாகவே நடித்தார். இந்த கதாபாத்திரமும் ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது. விஜய் ‘பிரியமானவளே’ படத்தில் ஒரு காட்சியில் பெண் வேடத்தில் வந்தார். அஜித்குமார் ‘வரலாறு’ படத்தில் பெண் நளினத்துடன் நடித்த காட்சிகள் வரவேற்பை பெற்றன.

சரத்குமார் ‘கட்டபொம்மன்’ படத்தில் பெண் வேடமேற்றார். விக்ரம் கந்தசாமி படத்தில் பெண் வேடத்தில் வந்து சிரிக்க வைத்தார். சமீபத்தில் வெளியான ‘இருமுகன்’ படத்தில் திருநங்கை வேடத்தில் வில்லனாக வந்தார். பிரசாந்துக்கு ‘ஆணழகன்’ படத்தில் பெண் வேடம் கச்சிதமாக அமைந்தது. ‘அயன்’ படத்தில் சூர்யா ஒரு பாடல் காட்சியில் பெண்ணாக தோன்றினார். விஷால் ‘அவன் இவன்’ படத்தில் பெண் வேடத்தில் பாடல் காட்சியொன்றில் நடனமாடி இருந்தார்.

சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள ‘ரேமோ’ படத்தில் அவர் ஏற்றுள்ள பெண் வேடம், படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் நர்சு கதாபாத்திரத்தில் வருகிறார். இதற்காக படப்பிடிப்புக்கு அதிகாலையிலேயே வந்து பல மணி நேரம் மேக்கப் போட்டு நடித்ததாக கூறினார் நர்சு தோற்றத்தில் அவர் தோன்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

நாகேஷ் முதல் சந்தானம் வரை நகைச்சுவை நடிகர்களும் பெண் வேடத்தில் நடித்துள்ளனர். மாட்டுக்கார வேலன், அதே கண்கள், காலம் வெல்லும் குடியிருந்த கோயில் உள்ளிட்ட படங்களில் நாகேஷ் பெண்ணாக வந்து சிரிக்க வைத்து இருந்தார். கவுண்டமணி நாட்டாமை படத்தில் பெண்ணாக வந்து குலுங்க வைத்தார். சந்தானம் அழகுராஜா படத்தில் பெண் வேடத்தில் நடித்து இருந்தார்.

வடிவேலு, விவேக் ஆகியோர் பல படங்களில் பெண் வேடங்களில் வந்து கலகலக்க வைத்தார்கள். தற்போது கதாநாயகர்கள் பலரும் தங்கள் படங்களில் சில நிமிடங்களாவது பெண் வேடத்தில் வருவது போன்ற காட்சி வைக்கும்படி டைரக்டர்களை நிர்ப்பந்திக்கிறார்கள். 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions