மரங்களின் அவசியம் குறித்து மக்கள் உணர தொடங்கிவிட்டனர்: நடிகர் விவேக் பேச்சு

Bookmark and Share

மரங்களின் அவசியம் குறித்து மக்கள் உணர தொடங்கிவிட்டனர்: நடிகர் விவேக் பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.

மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அமைப்பு மற்றும், கிரீன் குளோப் அமைப்பு சார்பில் நடந்த இந்த விழாவில், நடிகர் விவேக் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:- 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அழைத்து, உலகம் வேகமாக வெப்பமயமாகி வருகிறது. இதனால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள். இதனை தவிர்க்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். 

எனவே நீங்கள் நடிக்கும் திரைப்படங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று கூறினார். அதனை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகிறேன்.

இது வரையிலும் 27 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு முயற்சி எடுத்து உள்ளேன். தற்போது 196 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 35 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கும், கிராம உதய சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உள்ளன. 

சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட வளாகங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. இங்கு வழங்கப்படும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பேணி பாதுகாக்க வேண்டும். அடுத்தமுறை இங்கு வரும்போது, இந்த பகுதி சோலைவனமாக காட்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கன்றையும், உற்பத்தி செய்து பராமரிக்க கிராம உதய அமைப்பைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக உழைக்கின்றனர். 

எந்த திட்டத்தை செயல்படுத்த முனைந்தாலும் முதலில் எதிர்ப்பு வரும், பின்னர் அனைவரும் ஏளனம் செய்வார்கள், கடைசியில் அதனை ஏற்றுக் கொள்வார்கள். இது சுவாமி விவேகானந்தர் கூறிய வாக்கு. அதேபோன்று முதலில் நான் மரக்கன்றுகளை நட திட்டமிட்டபோது, சிலர் ஏளனம் செய்தனர், சில எதிர்ப்புகளும் மனதில் தோன்றியது. 

ஆனால் கடைசி வரையிலும் எனது கொள்கையில் உறுதியாக இருந்து, வெற்றி பெற்றுள்ளேன். தற்போது திருமண விழா உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், அங்கு வருகிறவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகளை வழங்குகின்றனர். இது சமுதாயத்தில் ஏற்பட்ட நல்ல மாற்றம் ஆகும். மரங்களின் அவசியம் குறித்து பொதுமக்கள் உணர தொடங்கி உள்ளனர்.

மரங்கள் இருந்தால்தான் மழை வரும். ஆறு, குளம் நிரம்பும். நிலத்தடி நீர் உயரும். விவசாய பொருட்களின் உற்பத்தி பெருகும். சிலர் விவசாய விளைநிலங்களை பிளாட் போட்டு விற்று, அதற்கு அப்துல்கலாம் நகர் என்று பெயரிட்டு விற்பனை செய்கின்றனர். இது வருத்தம் அளிக்கின்றது. நான் காலையில் மணியாச்சி ரெயில் நிலையத்தில் வந்து இறங்கிய உடன் தண்டவாளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். 

அங்கு தண்டவாளமே தெரியாத அளவுக்கு, பிளாஸ்டிக் பைகளால் நிறைந்து உள்ளது. இந்த பிளாஸ்டிக்தான் பூமி தாய்க்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நாம் வைக்கின்ற உலை. கால்நடைகளுக்கும் பிளாஸ்டிக் பைகள்தான் வில்லன். பிளாஸ்டிக் பைகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை கொண்டவை. அவை மண்ணில் புதைந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயராது. 

நாம் உணவுப் பொருட்களை சாப்பிட்டுவிட்டு பிளாஸ்டிக் பைகளை வீசி விடுகிறோம். அந்த உணவு பொருளின் வாசத்தை அறிந்து, கால்நடைகள் அந்த பிளாஸ்டிக் பைகளை தின்கின்றன. கால்நடைகளின் குடலில் சிக்கும் பிளாஸ்டிக் பைகளால் அவைகள் உயிரிழக்கின்றன. வெள்ளைக்காரன் தண்டவாளம் போட்டான், நாம் அதில் குப்பைகளை போடுகிறோம். 

மாறாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அனைவரும் உதவ வேண்டும். கருவேல மரம், சீமை கருவேல மரம், உடை மரம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்ற அந்த மரம், இல்லாத ஊரே தமிழகத்தில் கிடையாது. ஆனால் அந்த மரங்களால் நமக்கு தீமைகளே அதிகம். உடை மரங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி விடுகின்றன. 

அதன் அருகில் மற்ற எந்த மரங்களையும் அவை வளர விடுவது இல்லை. மற்ற மரங்கள் எல்லாம் தண்ணீரை ஆவியாக மேகத்துக்கு அனுப்புகின்றன. இதனால் நமக்கு மழை கிடைக்கிறது. உடை மரங்கள் ஆவியாக தண்ணீரை வெளியே அனுப்புவது இல்லை. காற்றில் இருக்கும் ஈரத்தைக்கூட அவை உறிஞ்சும் தன்மை கொண்டவை. 

இதனால் நாளடைவில் அந்த பகுதி முழுவதும் கடும் வறட்சியால் பாதிக்கப்படுகிறது. எனவே குளம், குட்டைகளில் வியாபித்து இருக்கும் உடைமரங்களை அகற்ற வேண்டும்.

நாம் கருவறையில் இருக்கும்போது தாயிடம் இருந்து தேவையான சத்துக்களை பெற்று உயிர் வாழ்கிறோம். நாம் பூமிக்கு வந்த வினாடி முதல் நமது வாழ்நாள் முழுவதும் மரங்கள் நமக்கு தேவையான ஆக்சிஜனை தந்து உதவுகின்றன. ஒரு சராசரி மனிதன் வாழ்நாள் முழுவதும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்சிஜனை சுவாசிக்கின்றான்.

இந்த ஆக்சிஜனை நமக்கு இலவசமாக உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் பேணி பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் மரங்களை மீது அன்பு காட்ட வேண்டும்.

இங்கு வழங்கப்பட்ட மரங்களை நெஞ்சோடு அணைத்து எடுத்துச் சென்று வீடுகளில் வளருங்கள். அவைகள் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கும். இவ்வூரில் அருள்பாலிக்கும் நம்மாழ்வாரின் விருட்சமாக புளியமரம் விளங்குகிறது. எனவே மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம். 

இவ்வாறு நடிகர் விவேக் பேசினார்.

 


Post your comment

Related News
பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
அப்துல்கலாமை பற்றி விஜய் பிரபல நடிகரிடம் சொன்னது இதுதான்! படித்து பாருங்கள்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions