Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அவரை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை – நடிகை வருத்தம்

Shweta Basu Prasad

தமிழில் உதயா ஜோடியாக ரா ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தி இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் ஸ்வேதா பாசுக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு வருடத்திலேயே விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது கொரோனாவால் ஸ்வேதா பாசு குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் 25 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே தனிமையில் முடங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஸ்வேதா பாசு கூறியதாவது:- “வாழ்க்கையில் தனிமையில் நான் வசித்தது இல்லை. ஆரம்பத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடனும் பிறகு கணவருடனும் இருந்தேன். விவாகரத்துக்கு பிறகு தனியாக வசித்து வருகிறேன். இப்போது கொரோனா ஊரடங்கும் வந்து விட்டது. இதனால் மனநல மருத்துவரிடம் வீடியோ மூலம் சிகிச்சை பெற்றேன். இந்த நேரத்தில் என்னைப்போல் பலர் மனநல சிகிச்சை எடுத்துக்கொள்வதாக அந்த மருத்துவர் சொன்னார்.

மன ஆரோக்கியம் முக்கியம். கொரோனா ஊரடங்கில் அனைவரும் மன நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். சில தினங்களுக்கு முன்பு அம்மா என்னை பார்க்க வந்தார். அவரை கட்டி அணைக்கக்கூட முடியவில்லை. கொரோனாவால் சில அடி தூரம் தள்ளி நின்றே பேசினோம். கடினமான கொரோனா பிரச்சினை விரைவில் கடந்து செல்ல பிரார்த்திக்கிறேன்”. இவ்வாறு அவர் கூறினார்.