திருமணமாகி விட்டால், அவர்கள் அணியும் ஆடைகள் முழுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன என நடிகை சமந்தா கூறியிருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வித்தியாசம் வித்தியாசமான உடைகளைத் தான் நான் அணிந்து செல்கிறேன்.
அதை வைத்து, சமூக வலைதளம் மூலம் என்னை கடுமையாக விமர்சிக்கின்றனர். அதுதான் எனக்கு நிறைய அச்சத்தை ஏற்படுத்தியது. எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. திருமணத்துக்குப் பின், ஒரு நிகழ்ச்சிக்கு நான் மார்டனாக உடை அணிந்து சென்றேன்.
அப்போது, என்னுடைய உடை குறித்து சமூக வலைதளங்களில் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். அது எனக்கு மிகப் பெரிய சங்கடத்தை அளித்தது. ஆனாலும், அடுத்த முறையும் அதே மாதிரியே நான் உடையணிந்து சென்றேன். ஆனால், இரண்டாவது முறை அப்படி சென்றபோது, முதல் முறை இருந்த அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் எதுவும் இல்லை. ஆக, உடை விஷயத்தில் கூட, எல்லோரையும் நாம் பழக்கப்படுத்த வேண்டியிருக்கிறது.
எல்லா விஷயத்துக்கும் முதல் அடிதான் முக்கியம். அதற்காக, நான் துணிச்சலான செயலை செய்து விட்டதாகச் சொல்லவில்லை. உடை அணியும் விஷயம், ஒரு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்கிற போது, அடுத்தவர் ஏன் அதில் மூக்கை நுழைக்கின்றனர் என புரியவில்லை. இருந்தாலும், அது குறித்தெல்லாம் பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை என்பதுதான் என்னுடைய அனுபவம். திருமணம் ஆகிவிட்டால், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்ற கோட்பாடுகளையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்றார்.