Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இதனால் தான் அஜித் அதிகம் வெளியே வருவதில்லை – பிரபல பைக் ரேஸர் விளக்கம்

Thala #Ajith

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் மற்ற ஹீரோக்கள் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்தவர். சினிமா விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார். அதேபோல் பட புரமோஷன்களிலும் ஈடுபாடு காட்ட மாட்டார். திரைப்பிரபலங்கள் பலரும் அஜித் பட புரமோஷனுக்காவது வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஜித் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளாததற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, அஜித் ஏன் வெளியே வருவதில்லை என்பதற்கான உண்மை காரணத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ‘அஜித் பொது இடங்களுக்கு வராததற்கு காரணம், மக்கள் அவரைத் தனியாக விடமாட்டார்கள் என்பதால்தான். இது ரேஸ் ட்ராக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது எடுக்கப்பட்ட போட்டோ. அவரை மக்கள் நடக்கக்கூட விடவில்லை’ என்று கூறியுள்ளார்.

இதே போல மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், ‘இது இன்னொரு புகைப்படம். அவரால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. இதுதான் கடைசி நாள். இதிலிருந்து தான் அவர் வெளியே வர வேண்டாம் என்று முடிவு செய்தார்’ என குறிப்பிட்டுள்ளார்.

அலிஷா அப்துல்லாவின் இந்த டுவிட், சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அலிஷா பிரபல பைக் ரேஸர் அப்துல்லாவின் மகள் ஆவார். அப்துல்லாவும் அஜித்தும் ஒன்றாக, பைக் ரேஸில் பங்கேற்றுள்ளனர். அலிஷாவும் பைக் ரேஸர் என்பது குறிப்பிடத்தக்கது.