விஜய்யை வைத்து அட்லி முதன்முதலாக இயக்கிய படம் ‘தெறி’. 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்த படம் 175 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர்.
மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் என ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தின் மிக பெரிய வெற்றியால், ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து அட்லி இயக்கத்தில் நடித்தார் விஜய்.
இப்படத்தை பிறமொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவி வந்தது. அந்தவகையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இப்படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதால், தெறி இந்தி ரீமேக்கை அவர் இயக்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.