இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான, டார்லிங், சிவப்பு மஞ்சள் பச்சை, நாச்சியார் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பிசியாக இயங்கி வருகிறார்.
இவர் தற்போது சூர்யா-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திற்கு இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 75வது படமாகும். மேலும் இப்படத்தின் இசை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும் என ஜிவி கூறியுள்ளார். கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.