தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் கதாநாயகனாக இருப்பவர் சித்தார்த். பா.ஜனதா அரசையும், மாநில அரசையும் டுவிட்டுகளால் விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் தனது எதிர்ப்பு கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். இதை அடுத்து சித்தார்த் மீதும் வழக்கு பதியப்பட்டது. சித்தார்த் பா.ஜனதாவின் திட்டங்களையும், போக்கையும் தொடர்ந்து கண்டித்து விமர்சித்து வருவதால், பா.ஜனதா தொண்டர்கள் நடிகர் சித்தார்த் மீது கோபத்தில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் சித்தார்த் தனியார் ஓட்டல் ஒன்றில் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு படுமோசமாக கருத்துகளை பயன்படுத்தி சித்தார்த்தை பா.ஜனதா தொண்டர்கள் விமர்சித்துள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த சித்தார்த் பிரதமர் மோடியை டேக் செய்து டுவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘பா.ஜனதா முட்டாள்கள், மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும்? எதை குடிக்க வேண்டும்? பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும்? என்று பாடம் நடத்துகிறார்கள். என் குடும்பத்தையும், நண்பர்களையும் தவறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமையில்லை’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.