கன்னட திரையுலகில் அறிமுகம் ஆகி, இந்தி பட உலகிற்கு சென்று, அங்கு முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர், தற்போது கபீர்கான் இயக்கத்தில் 83 என்ற படத்தில் தன்னுடைய கணவர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கின்றனர். இந்தப் படத்தில் கபில் தேவாக ரன்வீர் கபூர் நடிக்க, அவருடைய மனைவி ரெமி தேவ்வாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.
அதேபோல, மகாபாரதம் கதையை திரவுபதி கண்ணோட்டத்தில் படமாக்க இருக்கின்றனர்; அந்தப் படத்திலும் தீபிகா படுகோனே நடிப்பார் எனத் தெரிகிறது. இந்நிலையில், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பீர்களா? என ஒரு பத்திரிகை பேட்டிக்காக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.
அதில், தீபிகா படுகோனே கூறியிருப்பதாவது: வாய்ப்பு வரும் பட்சத்தில் நான் நடிப்பதில் எந்தத் தடையும் இல்லை. எல்லா மொழிகளும் எனக்கும் ஒன்று தான். நல்ல கதையம்சம் இருக்கும் படங்கள் தான் எனக்கு முக்கியம்.
ஒவ்வொரு நாளும் சூட்டிங் முடித்துவிட்டு நான் வீட்டுக்குத் திரும்பியதும், தற்போது நாம் நடித்துக் கொண்டிருக்கும் படம், நல்ல கதையம்சத்தை கொண்டிருக்கிறதா என்றுதான் யோசிப்பேன். இப்போதும், பல தென்னிந்திய இயக்குனர்கள், வித்தியாச வித்தியாசமான கதைகளுடன் என்னை அணுகுகின்றனர். கதைகளைக் கேட்டிருக்கிறேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில் நிச்சயம் நடிப்பேன்’. இவ்வாறு கூறியிருக்கிறார்.