நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான திரைப்படம் நடிகையர் திலகம். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி என வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரம் ஏற்றுத் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அனைத்து தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கீர்த்திக்கு கிடைத்தது.
இந்தநிலையில், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மறைந்த பழம்பெரும் நடிகை விஜய நிர்மலாவின் பயோபிக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய நிர்மலா, 250 படங்களில் நடித்தது மட்டுமல்லாமல், உலகிலேயே 42 படங்களை இயக்கிய ஒரே பெண் இயக்குனர் என்கிற கின்னஸ் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார். கீர்த்தி சுரேஷிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.