டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கமல், சிவாஜியை மிஞ்சும் வகையில் இப்படத்தில் விக்ரம் அதிக கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ரஷ்யாவில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவில் 15-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.