டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சைக்கோ’. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குனர்கள் சிங்கம்புலி, ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மென்மையான இசையுடன் தொடங்கும் இந்த டிரைலரில் சந்தோஷம், ஆச்சரியம், தேடல், ரத்தம், கோபம், அமைதி, பரிதவிப்பு, பழிவாங்கும் வெறி, பாசம், நேரம், காத்திருப்பு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிஷ்கினின் வழக்கமான ஸ்டைலில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாம் கேட்ட இசையுடன் தொடங்கும் இந்த டிரைலர் இளையராஜாவின் பின்னணி இசையோடு வரும்போது காட்சிகளின் விறுவிறுப்பு கூடுகிறது. இந்த டிரைலரில் கொலை, ரத்தம் சிதறல்கள் இருந்தாலும், இசையால் மென்மையாக்கி, காட்சிகளால் மிரட்டி இரண்டையும் மிக்ஸிங் செய்து கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.
மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தில், வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல், பேய் மீது பரிதாபப்படும் அளவிற்கு படத்தை உருவாக்கி இருந்தார். அதுபோல், இந்த சைக்கோ திரைப்படமும் பல கொலைகள் இருந்தாலும், அந்த கொலைகள் கூட ரசிக்கும் படி கொடுத்திருக்கிறாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.