தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும், உயிர்ப்பலிகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் இருந்த பகுதிகளை சுற்றிலும் தடுப்புகள் அமைத்துள்ளனர்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் நடிகை திரிஷா வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:- “இந்த கொரோனா அல்லது ‘கோவிட் 19’ சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டுக்குள் சமீபத்தில் வந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வது உங்களை அவமானப்படுத்தவோ, தொந்தரவு செய்வதற்கோ இல்லை.
இது உங்களுடைய பாதுகாப்புக்காக மட்டும்தான். உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காவும், குடும்பத்தில் இருக்கும் சிறியவர்கள், வயதானவர்கள் பாதுகாப்புக்காகவும் மட்டும்தான். தயவுசெய்து அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறாதீர்கள். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதை எல்லோரும் ஒற்றுமையாக செய்தால்தான் இந்த கொரோனா வைரசை ஒழிக்க முடியும்”. இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.