கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு உதவ ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்றும், எனவே நடிகர்-நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதனை ஏற்று நடிகர்கள் பலர் நிதி வழங்கி உள்ளனர். இதுவரை ரூ.2 கோடியே 45 லட்சம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகை நயன்தாராவும் நிதி கொடுத்துள்ளார். மும்பை நடிகையான காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கி உள்ளார். ஆனால் நடிகை தமன்னா தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
தமிழ் சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கு நிதி அளிக்கவில்லை. இது ‘பெப்சி’ தொழிற்சங்கத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிக தமிழ் படங்களில் நடித்துள்ள தமன்னா, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் நிதி கொடுத்து விட்டு தமிழ் திரைப்பட தொழிலாளர்களை புறக்கணித்து இருப்பது சரியல்ல என்று தெரிவித்தனர்.